தலைநகர் டெல்லியில் டிராக்டர் பேரணி சென்ற விவசாயிகளில் ஒரு குழுவினர் செங்கோட்டையை முற்றுகையிட்டு தங்கள் கொடியையும் அதில் ஏற்றினர். இதனால் செங்கோட்டையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
இன்று புதுடில்லியின் எல்லையிலிருந்து ஆரம்பமான டிரக்டா பேரணியே செங்கோட்டையை சென்றடைந்தது.
நடந்தும் டிரக்டர் மூலமாகவும விவசாயிகள் செங்கோட்டையை சென்றடைந்தனர்..வழமையான பாதையிலிருந்து விலகிச்சென்ற விவசாயிகள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர் இதன்போது விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து செங்கோட்டை பகுதியிலிருந்து விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும், டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறி, பாதுகாப்பு அதிகாரிகள் விவசாயிகளை தடுக்க முயன்றனர். ஆனால், விவசாயிகள் டிராக்டரை பயன்படுத்தி, தடுப்புகளை முட்டி மோதி இடித்து உள்ளே நுழைந்தனர். தடையை மீறி உள்ளே நுழைந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அதே போல காஜிப்பூர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.
இதனைத்தொடர்ந்து போலீசார் தண்ணீர் டாங்கிகளை பயன்படுத்தி விவசாயிகள் மற்றும் அவர்களின் டிராக்டர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இருந்தபோதிலும் போலீசாரின் தடுப்புகளை கடந்த விவசாயிகள், டிராக்டர்களுடன் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு செங்கோட்டையின் முன் டிராக்டர்களை நிறுத்தியும், தேசிய கொடி கம்பத்தின் அருகே திரண்டு கோஷங்களையும் எழுப்பினர். மேலும் விவசாயிகள் ஆயுதங்களை சுழற்றியும், தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். விவசாயிகள் தங்கள் கொடியை செங்கோட்டையில் ஏற்றினர்.
போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு சட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம் என டெல்லி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதற்கிடையே, விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.செங்கோட்டையை சுற்றி விவசாயிகள் திரண்டிருப்பதால் பரபரப்பான சூழல் நிலவியது. போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். செங்கோட்டையை சுற்றிலும் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், செங்கோட்டையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் தலைநகர்டெல்லியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.ஜனாதிபதி மாளிகை, பாராளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.மேலும், விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.பாதுகாப்பு கருதி கிரே லைன் மெட்ரோ ரெயில் நிலையம், ஜமா மஸ்ஜித் மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு மெட்ரோ ரெயில் நிலைய வாயில்கள் மூடப்பட்டுள்ளன.