குருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டன

குருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டன

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் அவர்கள், அப்பகுதி கிராம மக்களின் சார்பாக முல்லைத்தீவு போலீஸ் நிலையத்தில் 27.01.2020 இன்று முறைப்பாடொன்றினைப் பதிவுசெய்துள்ளார்.

அதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் மீண்டும் அவ்விடத்தில் நிறுவவேண்டும் எனவும், தொடர்ந்தும் தமிழ் மக்கள் குருந்தூர் மலைக்குச் சென்று தமது வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும் எனவும் ரவிகரன் அவர்கள் குறித்த முறைப்பாட்டினூடாக கோரியுள்ளார்.இந்த முறைப்பாட்டில் ரவிகரன் அவர்களுடன் ரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் அவர்களும் இணைந்திருந்தார்

மேலும் குறித்த முறைப்பாடு தொடர்பில் ரவிகரன்  கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 18.01.2021அன்று முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலைப் பகுதிக்கு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க படையினர் சகிதம் வருகைதந்து அங்கு தொல்லியல் அகழ்வுக்கான பணிகளை ஆரம்பித்து வைத்தார். இந் நிலையில் அங்கிருந்த முச்சூலம் உள்ளிட்ட தமிழர்களின் வழிபாட்டு அடையாளங் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலமாகவும், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அங்குள்ள மக்கள் மூலமாக எனக்கு தகவல் தரப்பட்டது. அதேவேளை குருந்தூர் மலைக்கு வழிபாட்டுக்குச்செல்லும் தமிழ் மக்களும் அங்கு செல்லவிடாமல் தடுக்கப்படுகின்றனர் எனவும் என்னிடம் கோவில் நிவாகத்தினர் முறையிட்டிருந்தனர்இந் நிலையில் மக்களின் இந்த முறைப்பாடுகளுக்கமைய குருந்தூர்மலை ஆதிசிவன், ஐயனார் கோவிலுக்கு 27.01.2021இன்று பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், நானும், சில பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்களோடும் சென்றிருந்தோம்.

அப்போது மக்களால் முறையிடப்பட்டதைப் போலவே, அங்கு சென்ற எங்களையே அங்கிருந்த இராணுவத்தினர் மலைப் பகுதிக்குச் செல்லவிடாது தடுத்திருந்தனர். பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் இதுதொடர்பில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமாநாயக்க மற்றும் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய நிலையில் குருந்தூர் மலைப் பகுதிக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டோம்.இதனைவிட ஆலயநிர்வாகத்தினர், ஊடகங்கள் வாயிலாக அறிந்ததைப்போலவே அங்கிருந்த தமிழர்களின் வழிபாட்டுச்சின்னங்களும் அங்கிருந்து அகற்றப்பட்டிருப்பதையும் அவதானிக்கமுடிந்தது. மேலும் கடந்த 10.09.2020 அப்பகுதி மக்களின் முறைப்பட்டிற்கு அமைய குருந்தூர்மலைப் பகுதிக்கு சென்றபோது அப்போதும் அங்கு இருந்த தமிழர்களின் வழிபாட்டுச்சின்னங்கள் அமைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து இனந்தெரியாதவர்களால் காணாமல் ஆக்கப்பட்டிருந்தது. அதேவேளை கடந்த 01.10.2020 அன்று குமுழமுனைப்பகுதித் தமிழ் மக்கள் அங்கு பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்வதற்காகச் சென்றபோது, அமைக்கப்பட்ட இடத்திலிருந்து காணாமல் போயிருந்த தமிழர்களின் வழிபாட்டுச் சின்னமான முச்சூலம், அருகே இருந்த காட்டிற்குள் உடைத்து வீசப்பட்டிருந்ததை அவதானித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த சூலத்தினை எடுத்து ஏற்கனவே இருந்த இடத்தில் வைத்து அன்றைய பொங்கல் வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர்.அதன் தொடர்ச்சியாக கடந்த 18.01.2021 அன்று அமைச்சர் வருகைதந்தபோது மீண்டும் அங்கிருந்த தமிழர்களின் வழிபாட்டுச் சின்னங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டிருப்பதாக அறியமுடிந்தது. இதிலே குறிப்பாக கடந்த 10.09.2020 நீதிமன்றில் இடம்பெற்ற இந்த குருந்தூர்மலை தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றில், தொல்லியல் திணைக்களம் குருந்தூர் மலையில் உள்ள தொல்பொருட்களைப் பாதுகாப்பதற்கு பாதுகாப்புக்கோரியிருந்தது. இந் நிலையில் நீதிமன்று தொல்லியல் திணைக்களம் கோரியதற்கமைய குருந்தூர்மலை வளாகத்தில் ஊர்காவல்படையின் பாதுகாப்பு காவலரண் அமைப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தது.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேதான் அங்கு பாதுகாப்பு தரப்பினர் இருந்த நிலையில், அங்கிருந்து தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு அடையாளங்கள் அங்கிருந்து இனந்தெரியாதவர்களால் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றது. இந் நிலையில் இவ்வாறு தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலே, 27.01.2020 இன்று முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் அப்பகுதிக் கிராமமக்களின் சார்பாக முறைப்பாடொன்றைப் பதிவுசெய்துள்ளேன். மேலும் குறித்த முறைப்பாட்டிலே, காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் வழிபாட்டுச்சின்னங்கள் மீள நிறுவப்படவேண்டும் எனவும், அங்கு தமிழ் மக்கள் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொடர்ந்து அனுமதிக்கவேண்டும்எனவும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளேன் – என்றார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *