திருக்கோவிலில் இறந்துகிடக்கும் நூற்றுக்கணக்கான கால்நடைகள்!

திருக்கோவிலில் இறந்துகிடக்கும் நூற்றுக்கணக்கான கால்நடைகள்!

திருக்கோவில் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்து கிடப்பதால் பண்ணையாளர்கள் செய்வதறியாது தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் .

அத்துடன் பண்ணையாளர்கள் ஏதிர்கொள்ளும் பிரச்சினைகளை கேட்டறிந்து, றூபஸ் குள பகுதிக்கு இன்று நண்பகல் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

திருக்கோவில் பிரதேச மேய்ச்சல் தரை விடயம் தொடர்பாக அமைச்சர் சீ.பி.ரத்நாயக்கவை சந்தித்து பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடிய போது விரைவில் தீர்வை பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கியிருந்தார்.

காலாகாலமாக ஜீவனோபாய தொழிலாக கால்நடை வளர்ப்பினை மேற்கொண்டு வரும், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பண்ணையாளர்கள் மனதில் எதிர்காலத்தில் இவ் இழப்பினை எவ்வாறு ஈடுகொடுக்க போகின்றோம் என்ற ஏக்கம் உள்ளது.

வட்டமடு மேய்ச்சல் தரை விவகாரம் நீதிமன்ற வழக்காக உள்ள நிலையில் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகளை பராமரிப்பதற்கு மேய்ச்சல் தரை இன்மையால் குறுகிய பரப்பினுள் வைத்திருப்பதால் புதிய வகை நோய் தாக்கத்தினால் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்து கிடக்கின்றன.

பல கால்நடைகள் இறக்கும் தறுவாயில் உள்ளன. இது தொடர்பாக பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் அவசர கூட்டமொன்றை ஏற்படுத்தி கால்நடை வைத்தியர், உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து கால்நடை இறப்பிற்கான காரணம் என்னவென்பதை அறிவதோடு மேய்ச்சல் தரை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கால்நடை பண்ணையாளர்கள் கால்நடைகளுக்கு ஒரு வகையான நோய் தாக்கத்தினால் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன என தெரிவித்தனர்.

1980-ஆம் ஆண்டு காலப்பகுதி தொடக்கம் தற்போது வரை மேய்ச்சல் தரை இல்லாததால் குறுகிய பகுதிக்குள் கால்நடைகளை பராமரிப்பதால் கால்நடைகளுக்கு நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட திருக்கோயில் பிரதேசத்துக்கு உட்பட்ட திருக்கோயில் விநாயகபுரம் தங்கவேலாயுதம் கஞ்சிகுடிச்சாறு மற்றும் தாண்டியடி, மண்டானை குடியிருப்பு முனை, காஞ்சிரங்குடா போன்ற கிராமங்களில் உள்ள பண்ணையாளர்களின் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *