வாடா நண்பா இந்தத்
தடைகளை உடைப்போம்…
வருங்காலமொன்றை
எமக்கெனப் படைப்போம்…
நண்பன் அன்வர் வந்தான்
அன்ரனியும் வந்தான் கூடவே
நண்பன் குமரனும் வந்தான்…
என்னடா செய்யலாம் எங்கள்
துயர்போக்க எனக் கைகோர்த்து நண்பர்களாய் நின்று கேட்டபோது,
முதலில் நாங்கள் இணையலாம்…
தொடர்ந்தே எல்லோர் கரங்களையும் இறுகப் பற்றிக்கொள்ளலாம்…..
“எங்கள் உறவுகள் இறந்த
உடல் அடக்கத்திற்கு ஆதிக்கத்தடை“ சொன்னான் அன்வர்…
“நாம் உயிரோடு கையளித்தவர்க்கு
இதுவரையும் இல்லை விடை”என்றான் குமரன், நான் முன்னே நடக்கிறேன் வாருங்கள் என்னோடு என்றான் அன்ரனி….
வெறுங்கை என நினைக்கவில்லை
விரல்கள் பத்தும் மூலதனமாய்
நடக்கிறது பயணம், நாளடைவில் இலக்கையடையும் இது உறுதி…
எங்கள் வீட்டு அடுப்பெரியாவிடினும்,
எங்கள் நெஞ்சத்தணலெடுத்து,
எம் உரிமைகள் மதியாதார் ஆணவம் கொழுத்துவோம் வாடா நண்பா!
மண்ணை நேசித்து, மானங்காக்கும்
நாம் மனிதர்கள் எனும் உரிமைகூட மறுக்குமிடத்தில், மதங்கள் கடந்து தாய்மொழிபேசும் தமிழராய் இணைவோம், எழுந்து வாடா…!
சற்றும் பொறுத்திருந்து பார்க்க நேரமில்லை, ஒற்றுமை ஒன்றே ஆயுதம்
என ஏற்றுக்கொண்டபடி
எல்லோரும் இணைகின்றனர்….
தொடர்கிறது பயணம்…., துலங்கிடும் உண்மையின் தூய ஒளி நோக்கி…
-காந்தள்-