அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் துணை உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (எஸ்.எல்.எம்.சி) தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்து பேசியபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிகளை விரைவாக வழங்கிய இந்தியாவின் செயற்பாட்டை ஹக்கீம் பாராட்டினார். பொருளாதார, நிதி மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான விடயங்களையும் இருவரும் விவாதித்தனர்.
அண்மைய நாட்களில் முஸ்லிம் சமுகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தனது மதிப்பீட்டை ஹக்கீம் பகிர்ந்து கொண்டதாக உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த மாத இறுதியில் தொடங்கும் ஐ.நா மனித உரிமை அமர்வில் இந்த பிரச்சினைகளும் உள்ளடங்கும் என அவர் தெரிவித்தார்.
நவம்பர் 2019 முதல் இந்திய மற்றும் இலங்கை தலைமைக்கு இடையிலான உரையாடல்களை துணை உயர் ஸ்தானிகர் ஜேக்கப் நினைவு கூர்ந்தார்.
2020 செப்ரெம்பரில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான மெய்நிகர் இருதரப்பு உச்சிமாநாட்டின் போது, அனைத்து இனத்தவர்களின் எதிர்பார்ப்புகளையும் உநிறைவேற்றும் வகையில் இலங்கை செயல்படும் என்ற நம்பிக்கையை பிரதமர் மோடி வெளிப்படுத்தியிருந்தார்.
13 ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபைகளை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு குறித்த இந்தியாவின் நீண்டகால மற்றும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை துணை உயர் ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தினார்.