பேரணியை குழப்புவதற்கு பல்வேறு முயற்சிகள்

பேரணியை குழப்புவதற்கு பல்வேறு முயற்சிகள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியின் போது அச்சுறுத்தல், மிரட்டல் மற்றும் தடைகளை ஏற்படுத்திய சிவில் குழுவினர் கைது செய்யப்படவில்லை என்று சர்வதேச ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு கிழக்கில் உள்ள சிவில் சமூகத்தினர் இணைந்து பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியை ஒழுங்குசெய்து பொது மக்களின் ஆதரவோடு இன்று மன்னாரை சென்று அடைகிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் பேரணியை குழப்புவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அந்த ஊடகம், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையின் இந்த குழுவினரோடு இருப்பது சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை அனுமதிக்கிறது என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக விபரித்துள்ளது.

எனினும், அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல்கள் இருந்த போதிலும் மக்கள் மத்தியில் இந்த பேரணி பெரும் ஈர்ப்பை பெற்றுள்ளதாகவும், அதிகளவான மக்கள் இதில் கலந்துகொண்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

விசேடமாக இந்த பேரணியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த நடைப்பயணத்தில் எந்தப் பங்கையும் செய்ய அவர்கள் அனுமதிக்கப்படவில்லை எனவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் பொத்துவிலிலிருந்து கடந்த 3ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி எதிர்வரும் 7ம் திகதி பொலிகண்டியில் முடிவடையவுள்ளது.

பின்வரும் விடயங்களை முன்னிலைப்படுத்தி இந்த பேரணி நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது

தமிழர்களின் கோவில்களை அழித்த பின்னர் பௌத்த விகாரைகளை நிறுவுவதன் மூலம் தமிழ் பகுதிகளில் நில அபகரிப்பு மற்றும் தமிழின் பாரம்பரிய, வரலாற்று இடங்களை சிங்கள பகுதிகளாக மாற்றுவது.

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த முஸ்லிம்கள் குடும்பங்களின் விருப்பத்திற்கு எதிராகவும், இஸ்லாமிய போதனைகளுக்கு எதிராகவும் தகனம் செய்யப்படுகிறார்கள்.

மலையகத்தில் உள்ள தமிழர்கள் 1,000 ரூபாய் சம்பள உயர்வுக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கவில்லை.

யுத்தம் முடிவடைந்ததிலிருந்து, தமிழ் பகுதிகளின் இராணுவமயமாக்கல் தொடர்கிறது, சிங்கள மக்களுக்கு ஆதரவாக தமிழர்களின் வரலாற்று அடையாளம் அழிக்கப்படுகிறது, தமிழர் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் சிங்கள குடியேற்றங்கள்.

தமிழ் கால்நடை உரிமையாளர்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர், அவர்கள் வசிக்கும் பகுதிகள் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்களின் கால்நடைகள் கொல்லப்படுகின்றன.

தமிழ் இளைஞர்களை குற்றச்சாட்டு அல்லது விசாரணையின்றி சிறையில் அடைக்க பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இப்போது முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது.

தமிழ் அரசியல் கைதிகள் பல ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிங்களவர்களுக்கு அரசாங்கம் தவறாமல் மன்னிப்பு வழங்கியுள்ளது, ஆனால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படவில்லை.

காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தங்களது அன்புக்குரியவர்களைக் கண்டுபிடித்து தருமாறு கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர், ஆனால் அரசாங்கம் அவர்களுக்கு பதில் அளிக்க மறுக்கிறது.

தமிழர்கள் போரின் போது கொல்லப்பட்ட தங்கள் உறவுளை நினைவுகூரும் உரிமை மறுக்கப்பட்டுள்ளனர், இது நினைவு நிகழ்வுகளை மறுப்பதன் மூலமும், இறந்தவர்களின் கல்லறைகளை அழிப்பதன் மூலமும், நினைவுச் சின்னங்களை இடிப்பதன் மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேடுகளை வெளிக்கொண்டுவரும் தமிழ் ஊடகவியலாளர்களையும், இந்த முறைகேடுகளை எதிர்க்கும் தமிழ் சமூக ஆர்வலர்களையும் அரசாங்கம் குறிவைக்கிறது என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *