கொழும்புத்துறைமுக ஊழியர்கள், பௌத்த குருமார் எதிர்ப்பு வெளியிடுகின்றனர் என்பதைக் காண்பித்து தமிழ் தேசியத்தை முற்றாக நீக்கம் செய்யக்கூடிய அரசியல் பேரம் பேசுதல்களில் வல்லரசு நாடுகளோடு சிங்கள ஆட்சியாளர்கள் ஈடுபடுகின்றனர்.
சீனாவுக்கு ஆதரவான மியன்மார் இராணுவம் அங்கு ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், இந்தோ- பசுபிக் பாதுகாப்புக்கான அமெரிக்க இந்திய அரசுகளின் நகர்வுகளிலும் தளர்வு அல்லது மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான நிலமை உருவாகியுள்ளதெனலாம். இந்தவொரு நிலையிலேயே கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தியை இந்தியாவுக்கு வழங்குவது என்ற உடன்பாட்டில் இலங்கை அரசாங்கமும் உள்ளுர் எதிர்ப்புகளைக் காண்பித்துத் தாமதத்தை ஏற்படுத்துகிறது என்ற கருத்துக்களும் இல்லாமல் இல்லை.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு என்ற அடிப்படையில், கடல்சார் கூட்டுப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்துழைப்பு (Maritime Domain Awareness–MDA) நடவடிக்கைகளை சில நாட்களுக்குள் இலங்கை ஆரம்பிக்க வேண்டுமென்று சென்ற மாதம் கொழும்புக்கு வந்தபோது கட்டளையிட்டிருந்தார். ஆனால் அந்தச் செயற்பாடுகள் இதுவரை ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
ஏனெனில் இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதாவது சிங்கள ஆட்சியாளர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களையும் அரசியல் ரீதியாகத் தோற்றகடிக்க வேண்டுமென்ற மன நிலையோடு செயற்பட்டு வருகின்றனர் என்பது கண்கூடு.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக 2012 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைச் சபையில் பிரேரணை சமர்ப்பித்து நிறைவேற்றியிருந்த தீர்மானத்தை 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி எனவும் நிலைமாறு கால நீதியென்றும் கூறிக்கூண்டு ஆட்சிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கம் நீத்துப்பேகச் செய்திருந்தது. மாறாக 30/1 தீர்மானத்துக்கு இணை அனுசனை வழங்குவதாகக்கூறி போர்க்குற்ற விசாரணைகூட ஆரம்பிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.
ஆகவே முடிந்தவரை சிங்கள ஆட்சியாளர்கள் எவராக இருந்தாலும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளையும் பிரித்தானியா போன்ற ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியா ஜப்பான் ஆகிய நாடுகளையும தங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் உத்தியைத்தான் கையாளுகின்றன. அதாவது இலங்கை சிறிய நாடு என்ற எண்ணக் கருவோடு செயற்படும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளை முடியுமானவரை தங்கள் காலடிக்கு வரச்செய்யும் நகர்வுகளையே மேற்கொண்டு வருகின்றனர். இலங்கைத் தீவில் இரண்டு தேசிய இனங்கள் இருக்கின்றன என்பதை நிறுவக்கூடாது என்ற நோக்கமே இதன் பின்புலமாகும்.
இங்கே கொழும்புத்துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தியை இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளிடம் கையளிக்கக்கூடாது என்பதல்ல பிரச்சினை. இந்த விவகாரத்தை வைத்து ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்கள் மற்றும் போர்க்குற்ற விசாரணை மனித உரிமை மீறல் குற்றச்ச்சாட்டுக்கள் போன்றவை உள்ளிட்ட பொறு;ப்புக்கூறல் விவகாரத்தை ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து முற்றாக அகற்றிவிட வேண்டும் என்பதை மையப்படுத்தியே இந்தப் பிரச்சினை பூதாகாரமாக்கப்படுகின்றது.
கொழும்புத்துறைமுக ஊழியர்கள் மற்றும் பௌத்த குருமார் எதிர்ப்பு வெளியிடுகின்றனர் என்பதைக் காண்பித்து தமிழ்த்தேசியத்தை முற்றாக நீக்கம் செய்யக்கூடிய அரசியல் பேரம் பேசுதல்களில் வல்லரசு நாடுகளோடு சிங்கள ஆட்சியாளர்கள் ஈடுபடுகின்றனர் என்பதே உண்மை.
மறுபுறத்தில், ஈழத்தமிழர் விவகாரத்தை மையப்படுத்தியே இலங்கையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளும் முற்படுகின்றன. ஆனால் இந்த விடயத்தில் இந்த நாடுகள் இரண்டு வகையான பிரச்சினையை எதிர்நோக்குகின்றன. ஒன்று ஈழத்தமிழர்களை முற்றுமுழுதாக ஏமாற்றிவிட முடியாதென்பது.
இரண்டாவது இலங்கையை முற்றுமுழுதாக நம்பிவிடவும் முடியாதென்பது. இங்கே இரண்டாவது காரணத்தை நோக்கினால், 1983 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்த்தனவின் ஆட்சியில் இருந்து இலங்கை எப்படி இந்தியாவை ஏமாற்றியது என்பதற்கு வரலாறுகள் உண்டு.
ஆனால் இந்த வரலாற்றுப் பட்டறிவுகளின் அடிப்படையில் இந்தியா இன்றுவரைகூட இலங்கை அரசாங்கத்தை அதாவது சிங்கள ஆட்சியாளர்களைக் கையாளவில்லை என்பதே வேடிக்கை. இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு என்ற அடிப்படையில், எம்.ஏ.டி எனப்படும் கடல்சார் கூட்டுப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்துழைப்புத் தொடர்பாகவும் இலங்கைக் கடற்படையின் ராடர்கள் இந்தியக் கடற்படையின் ராடர்களில் தெரிய வேண்டும் என்ற விடயங்கள் உள்ளிட்ட காடல்சார் பாதுகாப்புச் செயற்பாடுகள் குறித்தும் இலங்கை இதுவரை இந்தியாவின் கோரிக்கைக்கு ஏற்பச் செயற்படவில்லை.
அத்துடன் கொழும்புத்துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தி விடயத்திலும் இதுவரை உரிய பதில்லை. மாறாக துறைமுகத்தின் மேற்குக்கரை முனையை இந்தியாவுக்குக் கையளிப்பது குறித்துப் பேசப்படுகின்றது. ஆனால் இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு என்ற இலக்கில் குறிப்பாக கொழும்புப் போட் சிற்றி எனப்படும் சீனாவின் கொழும்பு சர்வதேச வர்த்தக நகர அபிவிருத்தித் திட்டம் பற்றி உண்ணிப்பாக அவதானிக்கவே கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனை அபிவிருத்தியை இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அழுத்தம் இலங்கைக்குப் பிரயோகிக்கப்பட்டு அதற்கான இணக்கமும் ஏற்பட்டிருந்தது. இதற்குப் பின்னால் அமெரிக்காவே பிரதானமாகச் செயற்பட்டுமிருந்தது.
ஏனெனில் குவாட் எனப்படும் இந்தோ- பசுபிக் பிராந்தியக் கடல் பாதுகாப்புச் செயற்பாட்டில் இந்தியா தலைமையில், ஜப்பான், அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான இரண்டாம் கட்ட முன்னேற்பாட்டுப் பயிற்சிகளும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தக் குவாட் அமைப்புக்குள் இலங்கைக் கடற்படையையும் அதிகாரபூர்வமற்ற முறையில் ஈடுபடுத்தவே அமெரிக்க, இந்திய நாடுகள் விரும்பியிருந்தன. இதன் பின்னணியிலேயே கொழும்புத்துறைமுக கிழக்கு முனை அபிவிருத்தி பற்றிய ஒப்பந்தமும் 2018 ஆம் ஆண்டு இலங்கையோடு செய்யப்பட்டிருந்தது.
ஆகவே இதன் பின்னணியில் அமெரிக்க, இந்திய நலன்களுக்கு ஏற்றவாறு செயற்பட இலங்கை மறுப்பது என்பது கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கூடுதலாக இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று மறுப்பதாலும் ஏகாதிப்பத்தியமென விமர்சிப்பதாலும் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் இறங்கி வரும் என்ற நம்பிக்கையும் அதற்கேற்க இந்தியாவும் தலையசைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பும்.
இரண்டாவது காரணம், இந்துமா சமுத்திரத்தில் சீனா தன்னையும் செயற்கையாக காண்பித்து இந்து சமூத்திர நாடுகளுக்குள் சீனாவும் உள்ளடக்கப்பட்டுவிட்டதென்ற உணர்வு இலங்கைக்கு அதிகமாகவே உண்டு.
ஆகவே இந்த இரண்டு காரணங்களையும் பிரதானமாகக் கொண்டு இலங்கை அரசாங்கம், அமெரிக்கா இந்தியா ஆகிய நாடுகளைத் துணிவோடு எதிர்த்து இலங்கையின் ஒற்றையாட்சியையும் இலங்கை தனிச் சிங்கள பௌத்த தேசம் என்பதையும் நிறுவிக் காண்பித்தும் வருகின்றன. ஆனால் இலங்கையின் இந்த நகர்வை அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளும் தெரிந்து கொண்டாலும், சிறிய நாடு என்ற கோணத்தில் சிந்திப்பதால், அதனைப் பயன்படுத்தி மிக இலகுவான முறையில் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றிய பேச்சுக்களையும் முற்றாகவே ஒழித்துவிடலாம் என இலங்கை நம்புகின்றது.
இலங்கையில் வாழும் ஏனைய தேசிய இனங்கள் அடக்கப்படுகின்றன என்பதைக்கூட இந்த வல்லரசுநாடுகள் ஏற்றுக்கொள்வது போன்றதொரு தோற்றப்பாட்டை மாத்திரமே காண்பிக்கின்றன. ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளரின் பரிந்துரைகூட இன அழிப்பு என்பதை ஏற்கவில்லை. ஆகவே அரசுக்கு அரசு என்ற அணுகுமுறைக்கு ஒப்பான முறையில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் சிங்கள ஆட்சியாளர்கள் மாத்திரமே இந்த நாடுகளுக்குத் தேவையாகின்றன.
மியன்மார் நாட்டில் தமக்குரியவாறு ஆங் ஷhங் சூகியை பதவியில் அமர்த்தியபோதும், அவர் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு ஏற்றவாறு செயற்பட மறுத்திருந்தார். ஏனெனில் போர்க்குற்றச்சாட்டுக்கள் இன அழிப்பு விவகாரங்களில் இருந்து தனது படைகளைக் காப்பாற்றவே ஆங் ஷாரங் சூகி முற்பட்டிருந்தார். இதனால் இறுதியில் சீனாவோடுகூட கைகோர்க்கும் நிலைக்கு ஆங் ஷhங் சூகி சென்றிருந்தார். ஆனாலும் மியன்மார் இராணுவம் சீன அரசோடு ஏற்கனவே நட்புறவாகி, பிராந்தியத்தில் சீனாவுக்குரியதான செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் சீனாவுக்கு விசுவாசமாகவே செயற்பட்டது.
பதவி கவிழ்க்கப்படுவதற்கு முன்னர் ஆங் ஷாரங் சூகி சீனா பக்கம் சென்றிருந்தாலும் அவரைவிட சீன இராணுவம் தமக்கு நம்பிக்கைக்குரியது என்ற எண்ணம் சீனாவுக்கு ஏற்பட்டிருந்தது. இதனாலேயே ஆங் ஷாரங் சூகியை சீனா நம்பவில்லை. ஏனெனில் ஆங் ஷhங் சூகி மேற்குலக நாடுகளின் தெரிவு என்பது சீனாவுக்கும் நன்கு தெரியும்.
ஆகவே இவ்வாறான அணுகுமுறை ஒன்றை இந்தியா அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகக் கையாண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தை உருவாக்கியிருந்தனர். ஆனால் இறுதியில் அந்த அரசாங்கம் கூட சீனா பக்கம் செல்லும் நிலைக்குச் சென்றுவிட்டது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றியடைந்ததும் அவருடைய அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடிய அல்லது ராஜபக்ச அரசாங்கத்தின் கோரிக்கைகளை ஏற்கக்கூடிய கையாலாகாத நிலைக்குச் சென்றிருக்கின்றன.
ஆக மியன்மார் நாட்டில் மேற்குலக நாடுகளுக்கு ஏற்பட்ட தோல்வி மாத்திரமல்ல. உலகில் தேசிய விடுதலை கோரி நின்கின்ற இனங்களின் செயற்பாடுகளில் தமது புவிசார் நலன்களை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு மேற்குலக நாடுகள் அரசுக்கு அரசு என்ற கொள்கையைப் பின்பற்றுவதால், உலக அரசியல் ஒழுங்குமுறை குழப்பத்திற்கு உள்ளாகின்றது.
இதனைப்புரிந்து கொண்டாலும், வல்லரசு நாடுகளின் வெளியுறவுக் கொள்கையும் அந்த நாடுகளைச் சார்ந்த ஜெனீவா மனித உரிமைச் சபை போன்ற சர்வதேசப் பொது அமைப்புகளின் செயற்பாடுகளும் உலகில் விடுதலை கோரிப் போராடும் தேசிய இனங்களுக்கு ஏற்றதாகவே இல்லை.
பூகோள அரசியலும் புவிசார் அரசியலும் அரசுக்கு அரசுக்கு என்ற அணுகுமுறையில் செயற்படுகின்றபோதும் அது காலத்திற்குக் காலம் தேவைகளைப் பொறுத்து மாறுபடும் தன்மை கொண்டவை. ஆனால் சர்வதேச் சட்டங்கள் அவ்வாறில்லை. இருந்தாலும் காலத்தின் தேவைக்கு ஏற்ப சர்வதேசச் சட்டங்கள் செயற்பட்டாலும் புவிசார் அரசியலில் தமக்குரிய தேவை எதுவோ அதனையே வல்லாதிக்கச் சக்திகள் செய்து கொண்டிருக்கின்றன.
2009 ஆம் ஆண்டுக்கு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பு விசாரணைக்குரியதான சர்வதேச் சட்டங்களும் அணுகுமுறைகளும் ஏற்புடையதாக இருந்தாலும் புவிசார் அரசியல் நலன்சார்ந்து அது பற்றிய விசாரணைப் பொறிமுறை தவிர்க்கப்படுகின்றது.
-அ.நிக்ஸன்-