வடக்கும் கிழக்கும் ஒன்றிணைந்து புதிய அரசொன்று உருவாகிவிடுமோ என்ற பீதி நாட்டுப்பற்றுள்ள மக்களின் உள்ளங்களை ஆட்டிப்படைத்துள்ளது. அதனால்தான் ஆரம்ப காலம் முதல் அவ்வாறானவர்கள் மாகாண சபைகளை வரவேற்கவில்லை என்று பொது மக்கள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார் .
சிங்கள நாளேடொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளமை வருமாறு,
மாகாண சபைகள் தேவையில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். எனினும் நாட்டின் அரசியலமைப்பு அது தேவை என்கிறது. மாகாண சபை முறையை நான் எதிர்க்கிறேன் என்பதை நான் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறேன். அதன் மூலம் நாட்டின் ஒற்றையாட்சிக்கு பலமான அடி விழுவதுடன் எமது நாட்டையும் ஒரு சமஷ்டி நாடாக மாற்றியமைக்க வேண்டியேற்படும்.
நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்கு கடந்த 2500 வருடங்களாக எம்மில் பல லட்சம் பேர் தமது உயிர்களை தியாகம் செய்துள்ளார்கள். அதன்படி இது ஒரே நாடு இதில் ஒரே சட்டம் என்ற நிலை காணப்படுமாயின் ஒன்பது மாகாணங்களில் ஒன்பது வகையான சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது.
ஒற்றையாட்சியை விரும்பும் ஒரு அரசு என்ற வகையில் அது பற்றி சிந்திப்பது பிழையல்ல.
புதிய அரசயலமைப்பொன்றை நாம் தயாரிக்கப்போகிறோம். அதன்படி குறைந்த அதிகாரங்களுடனான மாகாண சபைகள் இயங்குவதை நாட்டின் பொதுமக்களும் விரும்புவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.