செவ்வாய் கிரகத்தின் படத்தை அனுப்பிய ‘ஹோப்’ விண்கலம்

செவ்வாய் கிரகத்தின் படத்தை அனுப்பிய ‘ஹோப்’ விண்கலம்

அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் 25 ஆயிரம் கி.மீ. தொலைவில் இருந்து முதல் முதலாக செவ்வாய் கிரகத்தின் படத்தை அனுப்பியுள்ளது. இந்த படத்தை டுவிட்டரில் பதிவிட்டு அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் ஆகியோர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அமீரகத்தில் தயாரிக்கப்பட்ட ‘ஹோப்’ விண்கலம் ஜப்பான் நாட்டில் இருந்து கடந்த ஆண்டில் விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளியில் 7 மாதங்கள் பயணம் செய்து கடந்த 9-ந் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை முதல் முயற்சியிலேயே அடைந்து சாதனை படைத்தது.

இந்த விண்கலம் துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து ‘ஹோப்’ விண்கலம் நல்ல நிலையில் உள்ளதாகவும், எந்தவிதமான தொழில்நுட்ப கோளாறுகளும் அதில் ஏற்படவில்லை எனவும் விண்வெளி கட்டுப்பாட்டு மையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வாரத்திற்குள் தனது முதல் புகைப்படத்தை அனுப்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று ‘ஹோப்’ விண்கலம் தனது முதல் புகைப்படத்தை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பியுள்ளது. இந்த படமானது செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் சரியாக 24 ஆயிரத்து 700 கி.மீ தொலைவில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை அமீரக தலைவர்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதில் அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘அரபு விண்கலம் செவ்வாய் கிரகத்தின் வரலாற்று சிறப்புமிக்க முதல் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் பரப்பில் இருந்து 25 ஆயிரம் கி.மீ. தொலைவிற்கு மேல் இருந்து இதனை படம்பிடித்துள்ளது’’ என பதிவிட்டுள்ளார்.

அதேபோல அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான், ‘‘அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தின் முதல் படத்தை அனுப்பியுள்ளது நமது வரலாற்றில் முக்கிய தருணமாகும். மேலும் விண்வெளித்துறையில் முன்னேறிய நாடுகளில் அமீரகமும் இணைந்துள்ளதை குறிப்பதாக உள்ளது. இந்த ‘ஹோப்’ விண்கலத்தின் பணியானது செவ்வாய் கிரகத்தின் புதிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கும். மனிதகுலத்திற்கு பயனளிக்கும்’’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘ஹோப்’ விண்கலம் அனுப்பியுள்ள செவ்வாய் கிரகத்தின் படத்தில் சூரியனை நோக்கியுள்ள பகுதி சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களின் கலவையாக பளிச்சென்றும், அதற்கு பின்புற பகுதி இருட்டாகவும் உள்ளது.

செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையானது நீள்வட்ட வடிவில், குறைந்தபட்சமாக 22 ஆயிரம் கி.மீ. தொலைவாகவும், அதிகபட்சமாக 44 ஆயிரம் கி.மீ. ஆகவும் உள்ளது. இந்த தொலைவுகளில் அந்த விண்கலம் பயணம் செய்து மாறுபட்ட கோணங்களில் அரிய புகைப்படங்களை எடுத்து அனுப்பும் என தெரிகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *