ராஜபக்சாக்களின் கூட்டுக்குள் பெரும் குழப்பம்

ராஜபக்சாக்களின் கூட்டுக்குள் பெரும் குழப்பம்

ஜெனிவா மனித உரிமைச் சபையின் அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன கட்சி அரசாங்கத்துக்குள் குழப்பங்கள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் சா்வதேச ரீதியாகத் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைச் சமாளிக்க அரசாங்கம் உயர்மட்ட இராஜதந்திரிகளை நாடியிருப்பதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளும், அமெரிக்கா மற்றும் ஜெனிவாவில் உள்ள ஸ்ரீலங்கா இராஜதந்திரிகளும் இந்த விவகாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பங்காளிக் கட்சிகளோடு கலந்துரையாடி வருகின்றார்.

இதனால் ஜெனிவா விவகாரத்தைக் கையாளும் பொறுப்பு வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவிடம் ஒப்படைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ராஜபக்சவின் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பன்னிரண்டு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மஹிந்த ராஜபக்சவுடனும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனும் கலந்துரையாடுகின்றனர். 

ஆனால் ஊடகங்களில் வெளி வருவது போன்று பாரிய முரண்பாடுகள் இல்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறியுள்ளார்.

கட்சியின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வகிக்க வேண்டுமென விமல் வீரவன்ச கூற முடியாதெனவும் அந்த உரிமை கட்சி உறுப்பினர்களுக்கு மாத்திரமே இருப்பதாகவும் கூறியுள்ள சாகர காரியவசம், அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தலைமைப் பொறுப்பை யார் வகிக்க வேண்டுமெனக் கூற வேண்டிய அவசியம் இல்லையெனவும் தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறானதொரு நிலையில், அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாக மூத்த உறுப்பினர்கள் சிலர் பேச்சு நடத்திச் சுமூகமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவே உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ஜெனிவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக எடுக்கவுள்ள தீர்மானத்தை எதிர்க்கவோ அல்லது ஸ்ரீலங்காவிற்கு சாதகமாக மாற்றியமைக்கவோ பலமான அரசாங்கம் இருக்க வேண்டுமென்றும் முரண்பாடுகளை உருவாக்கி அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த வேண்டாமெனவும் அங்கத்துவக் கட்சிகளிடம் மஹிந்த ராஜபக்ச கேட்டிருப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் ஜெனிவா விவகாரத்தைச் சமாளிக்க உயர்மட்ட இராஜதந்திரிகளும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆலோசனைகளோடு குறித்த உயர்மட்டக்குழு செயற்பட்டு வருவதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியை மையப்படுத்திய அங்கத்துவக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் ஜெனிவா விவகாரத்தைக் கையாளும் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தாதென்றும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. 

இருப்பினும் ஜெனீவா விவகாரத்தை இலகுவாகக் கையாள்வோம் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *