அதிசயப் பறவை “துருவ ரேன்” (Arctic Terns)

அதிசயப் பறவை “துருவ ரேன்” (Arctic Terns)

உலகத்தில் உள்ள உயிரினங்கள் எல்லாம் அதிசயமானவைகள், அவை சிறிதோ பெரிதோ பார்ப்பதற்கு அழகானவைகளோ அழகற்றவைகளோ சாதுவானவைகளோ கொடியவைகளோ யாவையும்  இறைவனின் அற்புதப் படைப்பே ஆனாலும்  அவைகள் எல்லாவற்றையும்விட பறவைகளே சிறு வயது தொடக்கம் மனிதனின் கவனத்தை ஈர்ப்பவை.  பறவைகளில் நீண்ட தூரம் பிரயாணம் செய்யும் பறவை “ரேண்”(Tern) அல்லது “ஆக்டிக் ரேண்” (Arctic Tern) என அழைக்கப்படுகின்றது. இவை ஒரு வருடத்தில் வட துருவத்திலிருந்து(Arctic) புறப்பட்டு தென் துருவத்திற்குச்(Antatica) சென்று மறுபடியும் வட துருவத்திற்கு திரும்புகின்றதுது, இந்த பிரயான தூரம் 70,900 கிலோ மீற்றர் ஆகும்

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வசிப்பவர்கள் கடும் குளிரை தவிர்ப்பதற்காக ஆசியா ஆபிரிக்கா கண்டங்களில் உள்ள நாடுகளுக்குச் சென்று உல்லாசமாக நாட்களைக் கழித்து மறுபடியும் கோடை காலம் ஆரம்பிக்கும்போது நாடு திரும்புவார்கள். அப்படிப் போக முடியாவிட்டாலும் எந்தப் பாதிப்பும் அவர்களுக்கு ஏற்படப் போவதில்லை ஆனால் இந்தத் தூரப் பயணம் இப்பறவைகளுக்கு மிக மிக அவசியம் கடும் குழிரிலிருந்தும் அக்காலத்தில் ஏற்படும் உணவுத் தட்டுப்பாட்டிலிருந்தும் தமது உயிரைக் காப்பாற்ற இந்த தற்காலிக இடப் பெயர்வு தவிர்க்க முடியாததொன்றாக இருக்கின்றது

இவை தங்கள் பிறப்பிடமாகிய வடதுருவத்தின் சற்று தென்புறச் சுற்றுவட்டத்தில் அமைந்துள்ள அமெரிக்கா, அலஸ்கா, கனடா, கிறீன்லாந்து நாடுகளிலிருந்து ஆவணி (August), புரட்டாசி (September) மாதங்களில் தென் துருவம் நோக்கி தமது பிரயாணத்தை ஆரம்பிக்கும். அன்ராரிக்கா (Antarctica) பகுதியிலுள்ள வெடேல் (Weddel Sea Peninsula) கடற்குடாவிற்குச் சென்று நாலு ஐந்து மாதங்கள் தென் துருவ கோடை காலத்தைக் கழித்து மறுபடியும் தமது பிறப்பிடம் நோக்கி சித்திரை (April), வைகாசி (May) மாதங்களில் திரும்பப்போய்ச் சேருகின்றன.

இவற்றின் பிரயாண பாதை, தென் துருவம் நோக்கிச் செல்லும்போது  பிரேசில் நாட்டுக் கரையோரப்பகுதி வழியாக அல்லது தென் ஆபிரிக்கக் கரையோரப்பகுதி வழியாகச் சென்று தென் துருவ வெடல் கடற் குடா சென்று பின்பு  திரும்ப வட துருவம் நோக்கி பிரயாணம் பண்ணும்போது தென் ஆபிரிக்கக் கரையோரமாகச் சென்று மத்தியில் அத்திலாந்திக் சமுத்திரத்தை குறுக்காக கடந்து “S” வடிவத்தில் வட அமெரிக்க கரையோரமாகச் சென்று மறுபடியும் தமது இருப்பிடத்தைச் சென்றடையும்.

மேலும் இவை தெற்கு நோக்கி தமது பிரயாணத்தை ஆரம்பித்து அத்திலாந்திக் சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ளதும் போர்த்துக்கல் நாட்டிலுள்ள லிஸ்பன் நகரத்திலிருந்து ஏறக்குறைய 1000 கிலோ மீட்டர்கள் தூரத்தில் அமைந்துள்ளதுமான அசோறஸ் (Azores) தீவுக்கூட்டத்தை சென்றடைந்து இளைப்பாறி தமது மிகுதிப் பிரயாணத்துக்குரிய சக்தியை அங்கு தாராளமாகக் காணப்படுபவையும், அவை விரும்பி உண்ணும் பிரதான உணவுமான பிளங்ரன் (zooplankton ), மணல் ஈல் (Sand-eels) ஆகியவற்றை உண்டு போதிய சக்தியோடு தமது பிரயாணத்தை மீண்டும் தொடரும்.  இந்த அசோறஸ் தீவுக்கூட்டம் ஒன்பது தீவுகளக் கொண்டது, அத்தோடு அதிகமாக எரிமலைகளால் பாதிக்கப்படும் ஒரு தீவுக்கூட்டமாகும். இந்த ரேண் பறவைகளுக்குமட்டுமல்ல இன்று விமானங்கள், கப்பல்கள், உல்லாசப் பயணக் கப்பல்கள் போன்றவற்றிற்கும் ஒரு இடைத் தங்கல் (Stop-over) இடமாக உபயோகப்படுகின்றது.

இவை எறும்புகள் போல கூட்டமாய் சேர்ந்து வாழும் பறவை இனமாகும், இதன் நிறை ஏறக்குறைய 100 கிறாம் மட்டுமே. சராசரி 30 வருடங்கள் வாழக்கூடியவை,  இவற்றின் நிறம் சாம்பல்-வெள்ளை, கால்களும் சொண்டும் சிவப்பு நிறம், இதன் தலை கறுப்பு நிறத்தில் தொப்பி போட்டதுபோல் தோன்றும். இன்றைய உலகில் அருகி வரும் உயிரினங்களில் இந்தப் பறவையும் ஒன்றாகும் எண்ணை தேடி அலையும் மேற்கத்தைய நாடுகளும் பல பெரும் பண முதளைகளும் இரவு பகலாக இடைவிடாது வருடக்கணக்காக கடலடி சோதனைகளை நடாத்தி வருகின்றனர். இதற்காக இவர்கள் பயன்படுத்தும் உபகரணம் தற்கால விமான இயந்திரம் உருவாக்கும் சத்தத்தைவிட 100,000 மடங்கு கூடியவை. இவர்கள் உபயோகிக்கும் இந்த இயந்திரம் (Air gun) கடலின் அடி மட்டத்திலிருந்து 5 தொடக்கம் 10 கிலோமீட்டர்கள் ஊடுருவிச் செல்லக்கூடியவை, இந்த இயந்திரம் 10 வினாடிக்கு ஒருதடவைப்படி இடைவிடாது மணித்தியாலக் கணக்கில், நாள்தோறும் மாதந்தோறும் வருடக்கணக்காக இயங்கி வருகின்றது. கடலுக்கடியில் 200 மீட்டரின் கீழ் வெளிச்சம் இருக்காது, அநேகமான கடல்வாழ் உயிரினங்கள் ஒலிஅலைகள் மூலமாகவே உணவு தேடுதல், எதிரிகளிடமிருந்து தம்மை காப்பாற்றல், துணை தேடுதல் போன்ற காரியத்தை செய்கின்றன. இப்படியான பெரும் சத்தங்களினால் அவை பாதிப்படைந்து அழிந்து வருகின்றன. இதன்காரணமாக இவற்றில் தங்கியுள்ள பறவைகளும் உணவின்றி அழிந்து வருகின்றன. இந்த நாடுகளும் பண முதளைகளும் அழிந்தாலொளிய மிருக இன அழிப்பு மட்டுமல்ல மனித இன அழிப்பும் ஒருபோதும் நிற்கப் போவதில்லை

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *