இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய் கொள்கலன்களை திரும்பப்பெற இலங்கை முடிவு

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய் கொள்கலன்களை திரும்பப்பெற இலங்கை முடிவு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கன்டெய்னர் முனையத்தை மேம்படுத்துவதற்கான இந்தியா, ஜப்பான் உடனான முத்தரப்பு ஒப்பந்தத்தை கடந்த மாதம் இலங்கை அரசு ரத்து செய்தது.

அதற்கு வருத்தம் தெரிவித்த இந்தியா, ஒப்பந்த பொறுப்புக்கு கட்டுப்பட்டு இலங்கை செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இவ்விஷயத்தில் தனது அதிருப்தியை ஜப்பானும் வெளிப்படுத்தியது.

இந்நிலையில், இலங்கையின் கிழக்குப் பகுதி துறைமுகமான திரிகோணமலையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் சேமிப்பு கொள்கலன்களை திரும்பப்பெற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் உருவாக்கப்பட்ட அந்த 99 எண்ணெய் கொள்கலன்கள், கடந்த 2003-ம் ஆண்டு, ஒரு லட்சம் டாலர் வருடாந்திர கட்டண அடிப்படையில் 30 ஆண்டுகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு குத்தகையில் விடப்பட்டன. அதற்கு சிலோன் பெட்ரோலிய கழக தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், எண்ணெய் கொள்கலன்களை இலங்கை அரசு திரும்பப்பெற முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு எரிசக்தித் துறை மந்திரி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய தூதர் கோபால் பாக்லேயுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அவர் இலங்கையின் கருத்துகளை ஏற்றுக்கொண்டதாகவும், எனவே திரிகோணமலை எண்ணெய் கொள்கலன்கள் அனைத்தும் விரைவில் நாட்டுக்கு சொந்தமாகிவிடும் என்றும் கம்மன்பில கூறினார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கன்டெய்னர் முனைய ஒப்பந்தத்தை ரத்து செய்த சூட்டோடு, எண்ணெய் கொள்கலன்களையும் திரும்பப் பெறும் இலங்கை அரசின் முடிவு, இந்திய-இலங்கை உறவில் சலசலப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *