திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை மீண்டும் இலங்கைக்க வழங்குவது தொடர்பாக எந்த இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் அது தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்தியா கூறியுள்ளது.
குறித்த எண்ணெய் தாங்கிகள் விரைவில் இலங்கைக்கு கிடைக்க உள்ளதாக மின் சக்தி அமைச்சரும், அமைச்சரவையின் இணைப் பேச்சாளருமான உதய கம்மன்பில அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
இதன் மூலம் இந்த எண்ணெய் தாங்கிகளை பயன்படுத்தி திருகோணமலைக்கு அருகில் உள்ள கடலில் செல்லும் கப்பல்களுக்கு எரிபொருளை வழங்க சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அவர் கூறியிருந்தார்.
2003 ஆம் ஆண்டு அன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றின் மூலம் எண்ணெய் தாங்கிகளை இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு வழங்கியது. 2015 ஆம் ஆண்டு அவற்றை திரும்ப பெற முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.
இந்த நிலையிலேயே இந்திய அரசினை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.