இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ். நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையத்தினை மத்திய அரசிடம் கையளிப்பதற்கு இணங்கியதன்
காரணமாகவே திறப்பதில் காலதாமதம் காணப்பட்டதாக இந்நாள் முதல்வர் வி.மணிவண்ணன் அரசியல் நோக்கத்தால் ஆதாரமற்று குற்றம்சாட்டியுள்ளார் என முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட் தெரிவித்தார்.
தற்போதைய மாநகர முதல்வர் தெரிவித்த கருத்துக்கு பதில் வழங்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
யாழ். கலாசார மத்திய நிலையத்தினை கையேற்பதற்காக நாம் பல முயற்சிகளில் ஈடுபட்டோம்.
கலாசார நிலையத்தினை இயக்குவதற்கான உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான அனுமதிக்காக பிரதமரை நேரில் சந்தித்து உரையாடவும் நிர்வாக ரீதியில் அனுமதி கோரியிருந்தோம்.
அதற்கான அனுமதி கிடைத்து உரையாடவுள்ள விடயங்கள் தொடர்பில் பட்டியல் கோரப்பட்டபோது இந்த விடயமே முதன்மைப்படுத்தப்பட்டு நிகழ்ச்சி நிரலும் தயாரிக்கப்பட்டது.
நான் மாநகர முதல்வராக பதவியில் இருந்த காலத்தில் இதனை திறக்க முயன்றும் கொரோனா காரணமாக பணிகள் தடைப்பட்ட காலத்தில் சிலர் இதனை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்ல முயல்வதாக அறிந்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக இந்தியத் தூதுவரை கொழும்பில் சந்தித்து இதனை உடன் திறக்கவும் இந்தியப் பிரதமர் மோடி அவர்களே திறந்து வைக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்திருந்தோம்.
இந்தக் காலத்தில் இலங்கையில் இருந்து இந்தியா சென்ற அமைச்சர் குழாமில் இருந்த ஓர் அமைச்சரே இதனை மாநகர சபை நிர்வகிக்க மாட்டாது என்பதனால் எம்மிடம் கையளியுங்கள் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதனை இந்நாள் முதல்வரின் பங்காளிக் கட்சியின் தலைவர் மூலம் உறுதி செய்ய முடியும் – ஏனெனில் அவரும் அந்த அமைச்சர் குழாமில் அங்கம் வகித்திருந்தார்.
இந்த விடயங்களை கூட்டமைப்பு சார் மாநகர சபை உறுப்பினர் அப்போதே மாநகர சபையில் பிரஸ்தாபித்தபோதும் கலாசார மண்டபத்தை மத்திய அரசிடம் கையளிக்க முடியாது என சபையிலேயே தெரிவித்திருந்தேன்.
இந்தக் காலத்தில் சபையில் இருந்திருக்காத இந்தாள் முதல்வர் அரசியல் ஆதாயத்திற்காக ஆதாரமற்ற குற்றச் சாட்டை முன்வைக்க கூடாது.
இக் கட்டிடம் கட்டும் காலத்தில் இந்தியா என்றாலே றோ எனக் கூறி ஓடி ஓழித்து அவர்களிடம் பெறும் உதவியினையே மறுத்தவர்கள் இவர்கள்.
இது மட்டுமல்ல – மாநகர சபையின் புதிய கட்டிடத்திற்கு முதலில் ஆயிரத்து 800 மில்லியன் ரூபா திட்டமிடப்பட்டபோதே 300 மில்லியன் ரூபா சபை நிதியில் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆனால் பின்னர் 2 ஆயிரத்து 150 மில்லியன் ரூபா செலவாக அதிகரித்த போதும் சபையின் எந்த நிதியும் இன்றி அமைப்பதற்கான அனுமதியை பெற்றுக் கொடுத்தோம்.
இதன் ஆரம்ப நிகழ்வின் செலவிற்கு வெறும் 10 மில்லியன் ரூபா அனுமதி கோரியபோது இந்தக் கட்டிடம் அமைக்கப்படமாட்டாது. அதனால் இந்த அனுமதியை வழங்க முடியாது எனக் கூறியவர்கள் இன்றைய ஆட்சியில் உள்ள இரு பங்காளிக் கட்சிகள்தான்.
ஆனால் இந்தக் கட்டிடம் வராது விட்டால் எனது சொந்தப் பணத்தில் வழங்கத் தயார் என எமது கட்சி உறுப்பினரும் ஐ.தே.கட்சியின் ஓர் உறுப்பினரும் கூறியதன் பெயரிலேயே அது அன்று அனுமதிக்கப்பட்டது.
இவை எதுவுமே அறியாது முதல்வராக வந்தபின்பு ஓடிப்போய் அக் கட்டிடத்தை பார்த்து வழி நடாத்துகின்றனராம். இது தான் அநாகரீக அரசியல் என்றார்.