இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடும் உரிமை இநதியாவுக்கு கிடையாது என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்தார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே எம்மீது 13 ஆம் திருத்தம் திணிக்கப்பட்டு மாகாணசபை முறைமைகள் உருவாக்கப்பட்டன. எமக்கு உண்மையில் அவசியமற்ற ஒரு முறைமையாகவே இதனை பார்க்கிறோம். ஒரே நாடு ஒரே சட்டம் என்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும்.
அவ்வாறு இருக்கையில் ஒன்பது மாகாணங்களுக்கு ஒன்பது சட்டங்களை நடைமுறைப்படுத்த அனுமதிக்க முடியுமா? மாகாணசபை முறைமையை நீக்குவதே எமது நோக்கமாகும்.
இந்தியாவின் திணிப்புகள் எமக்கு அவசியமில்லை. இலங்கை சுயாதீனமான நாடே தவிர இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாக கருத முடியாது.
எனவே எமது உள்ளக விடயங்களில் தலையிடும் உரிமை இந்தியாவிற்கு இல்லை.
இப்போதும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து ஆராயப்படுகின்றது. அதில் மாற்றங்கள் அவசியம் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.