ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை தொடர்ந்து ஐபேட் உற்பத்தியை இந்தியாவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து கணினி பாகங்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் மத்திய அரசு திட்டத்தில் ஆப்பிள் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு டேப்லெட், லேப்டாப் மற்றும் சர்வெர்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வோருக்கு சிறப்பு சலுகை அறிவிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய திட்டம் மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்த ஸ்மார்ட்போன் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் திட்டத்தின் அடிப்படையில் இருக்கும். இது எலெக்டிரானிக் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும். இதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு முதல் ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது. தற்சமயம் பாக்ஸ்கான், விஸ்ட்ரன் மற்றும் பெகட்ரான் போன்ற நிறுவனங்களை சார்ந்து இந்திய உற்பத்தியை மேற்கொள்கிறது. இதற்கென ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்திக்கென இந்தியாவில் 90 கோடி டாலர்களை ஐந்து ஆண்டுகளில் முதலீடு செய்ய இருக்கிறது.
அதன்படி இந்தியாவில் ஐபோன்களை தொடர்ந்து ஐபேட் உற்பத்தியை துவங்கலாம் என கூறப்படுகிறது. தற்போதைய தகவல்களின் படி இந்தியாவில் ஐபேட் உற்பத்தியை ஆப்பிள் துவங்குமா என்பது தற்சமயம் கேள்விக்குறியாகவே உள்ளது.