ஒரே நாடு ஒரே சட்டம் எனத் தெரிவிக்கும் அரசாங்கம் அதனை மீறிச் செயற்படுவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் இடம்பெற்றால் தடையுத்தரவை பெற்றுக்கொள்ளும் பொலிஸார், கொழும்பில் இடம்பெற்றால் ஏன் அவ்வாறு செயற்படுவதில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழுவிடம் மலையக மக்கள் முன்னணியின் பரிந்துரைகளை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் முன்வைத்தார்.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மனோ கணேசனிடம் ‘ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற விடயத்தை அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழுவிடம் வலியுறுத்தினீர்களா? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் வழங்கிய மனோ கணேசன்,
ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற வகையில் அரசாங்கத்தை முதலில் செயற்படக் கூறுங்கள்.
போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் குறித்து பொய்யான தகவல்களை வழங்கி தடை உத்தரவுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டாமென நான் கோரிக்கை விடுத்துள்ளேன்.
கொழும்பில் எத்தனை ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் இடம்பெறுகின்றன. அவற்றுக்கு தடை உத்தரவு பெறப்படுவதில்லையே.
எனினும் வடக்கில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்திற்கு மாத்திரம் ஏன் தடையுத்தரவு? ஒரே நாடு ஒரே சட்டம் காணப்படுகின்றதா – இல்லை தானே? இதனை அரசாங்கமே மீறுகின்றது நாமல்ல.
தடையுத்தர பிறப்பிக்கப்பட்டது எனக்கு தெரியாது, எனக்கு யாரும் அதனை அறிவிக்கவும் இல்லை. நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் அதற்கேற்றவாறே மக்கள் பணியில் ஈபட்டோம்.
அதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்படுமானால் அதற்கு எம்மால் இணங்க முடியாது என்றார்