பொட்டு அம்மானும் – இந்திய படைகளும்  – பாகம் 03

பொட்டு அம்மானும் – இந்திய படைகளும் – பாகம் 03

பொட்டு அம்மான் இந்திய படைகளின் காலகட்டத்தில் தமிழ் மக்களுக்காக எதிர்கொண்ட இன்னல்களையும் அனுபவித்த வலிகளையுமே இத்தொடரில் பார்த்து வருகின்றோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான பொட்டம்மான், தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம், பிரிகேடியர் நடேசன் போன்றவர்கள் உட்பட காயமடைந்த சில போராளிகள், புலிகளின் மருத்துவப் பிரிவினர், மேலும் சில போராளிகள் என்று பலர் நெல்லியடியிலுள்ள அந்த வீட்டில் தங்கியிருந்தார்கள். இந்தியப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டைகள் மூண்ட போது வல்வெட்டித்துறையில் தங்கியிருந்த இவர்கள், இந்திய இராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக கரவெட்டிக்கும், பின்னர் நவிண்டிலிற்கும் இடம் யெர்ந்து கடைசியில் நெல்லியடிக்கு வந்திருந்தார்கள். படுகாயம் அடைந்திருந்த பொட்டு அம்மானின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்திருந்தது. சாய்மானக் கதிரையில் அவரை வைத்துச் சுமந்தபடிதான் எங்குமே நகரவேண்டியிருந்தது.

நெல்லியடியில் அவர்கள் வந்து தங்கியிருந்த இடம் சற்று பாதுகாப்பான இடம்போன்றுதான் தென்பட்டது. அனைவரும் தங்கக்கூடிய அளவிற்கு சற்று விசாலமானதும் கூட. மிகவும் புராதனமான அந்த வீடு, அப்பிரதேசத்தின் உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய மார்க்கண்டு என்பவருக்குச் சொந்தமானது. மார்க்கண்டு அவர்கள் விடுதலைப் போராட்டத்தின் ஒரு தீவிர ஆதரவாளர். தனது ஒரு புதல்வனை அவர் போராட்டத்திற்கு ஒப்படைத்திருந்தார் (அவரது மகனின் பெயர் விஜயன்). பிரதேசப் பொறுப்பாளர் சுக்ளாவின் ஏற்பாட்டின்படி அவர் இந்த வீட்டினை விடுதலைப் புலி முக்கியஸ்தர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். அயலவர்கள் அங்கு தங்கியிருந்த போராளிகளுக்கு பிரதான காவல் அரன்களாக நின்றுகொண்டிருந்தார்கள். உணவு முதல் அனைத்து ஆதரவுகளையும் அவர்கள் வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

பொழுது சாயும்நேரம்தான் அந்தச் சம்பவம் இடம்பெற்றது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த சில சிறுவர்கள் மூச்சிறைக்க ஓடிவந்து அந்தச் செய்தியை போராளிகளிடம் தெரிவித்தார்கள். காவல் உலா வந்துகொண்டிருந்த ஒரு தொகுதி இந்திய இராணுவத்தினர் போராளிகள் தங்கியிருந்த அந்த வீட்டை நோக்கி இரகசியமாக நகர்ந்துகொண்டிருப்பதாக அந்த சிறுவர்கள் செய்திகொண்டு வந்திருந்தார்கள். சிறுவர்களைத் தொடர்ந்து அங்கு வந்த அப்பிரதேசவாசிகள் சிலரும் இந்தியப் படையினர் அப்பகுதியைக் குறிவைத்து நகர்ந்துகொண்டிருப்பதாகச் தகவல் தெரிவித்தார்கள். துவிச்சக்கர வண்டிகளில் தலைதெறிக்க விரைந்துவந்த ஒரு பெரியவரும் மூச்சிறைக்க இந்தியப் படையினரின் நகர்வுபற்றி தகவல் வழங்கிவிட்டுச் சென்றார்.

வேறு திசையில் இருந்து மற்றொரு படை நகர்வொன்று இடம்பெறுவதாகவே அவர் தகவல் தந்திருந்தார். இதைக்கேட்டதும் பொட்டு அம்மான் எழுந்து உட்கார்ந்தார். விழிப்படைந்தார். சுற்றிவழைப்புக்களில் இருந்து எதிரியைத் தினறடித்து வெளியேறுவதில் அவருக்கு பல ஆண்டுகள் அனுபவங்கள் உண்டு. மட்டக்களப்பில் இருந்த போது அவரது காட்டு முகாம்களை; சுற்றிவழைத்த ஸ்ரீலங்காப் படையினரின் முற்றுகைகளை ஒரு பகுதியால் உடைத்துக்கொண்டு வெளியேறிய அனுபவங்கள் பல அவருக்கு உண்டு.

இராணுவ நடமாட்டம் பற்றிய விபரம் கிடைக்கும் போது, எந்தக் கட்டத்தில் அதைப்பற்றி கவலைப்படவேண்டும் என்பதை அவர் அனுபவத்தால் உணர்ந்திருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் மற்றொரு திசையில் இருந்து இந்தியப் படையினர் அவர்கள் தங்கியிருந்த பகுதியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த செய்தியை வேவுப் புலிகள் கொண்டு வந்தார்கள்.விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களும், காயமடைந்த போராளிகளும் தங்கியிருந்த அந்த நெல்லியடி வீடு இந்தியப் படையினரின் ஒரு மிகப் பெரிய முற்றுகைக்கு உள்ளாகப் போன்றது என்கின்ற உண்மை அங்கியிருந்த அனைவருக்கும் விளங்கியது

பல திசைகளிலில் இருந்தும் பெரும் பலத்துடன் முன்னேறி, புலிகள் தங்கியிருந்த வீட்டிற்கான அனைத்துப்பாதைகளையும் துண்டிக்கும் இந்தியப் படையினரின் திட்டம் அங்கு தங்கியிருந்த பொட்டம்மானுக்கு புரிந்தது. அவரது மூளை மிகவும் துரிதமாக வேலை செய்தது. எந்த ஒரு பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும் என்பது அவருக்குத் தெரியும். அவரது ஆராய்ச்சிக் கண்கள் அந்தப் பலவீனத்தைத் தேடின. அவரது பணிப்பின் பெயரில் சகல சிசைகளிலும் விரைந்த போராளிகள் இந்தியப் படை நகர்வுகள் பற்றிய அனைத்து விபரங்களையும் கொண்டு வந்தார்கள்.

இந்தியப் படையினர் அந்த இல்லத்தில் தங்கியிருந்த அத்தனைபெயரையும் உயிருடன் பிடிக்கும் நோக்கத்தோடு நிதானமாக தமது நகர்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் கடைப்பிடித்த அந்த நிதானம் புலிகள் தமது வேகத்தை கடைப்பிடிக்க உதவியாக இருந்தது. ஒரு பகுதியால் முன்னேறிக்கொண்டிருந்த இந்தியப் படையினர் தமது நிலைகளைப் பலப்படுத்திக்கொண்டு மூன்னேற சற்றுத் தாமதமேற்பட்டது. அவர்கள் முன்னேறிக்கொண்டிருந்த பிரதேசத்தில் இருந்த வீடுகளைச் சோதனையிட்டபடி அவர்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள் அப்பிரதேச கட்டமைப்பு, அதிகமான ஒழுங்கைகள், குறுக்குத் தெருக்கள், பனங்காணிகள் என்பனவும் அவர்களது நகர்வின் வேகத்தைச் சற்றுத் தாமதப்படுத்தியது.

இந்த தாமதத்தை சரியாகக் கணிப்பிட்டு புலிகள் பயன்படுத்திக்கொண்டார்கள். சாய்மானைக் கதிரையில் இருந்து துள்ளிக்குதித்தெழுந்த பொட்டம்மான், தனது அபாயகரமான காயங்களையும், அதனால் ஏற்பட்ட தாங்கமுடியாத உடல் உபாதையையும் பொறுட்படுத்தாமல், ஒரு போராளியின் தோளைப் பிடித்தபடி அந்த வீட்டை விட்டு வெளியேறினார். ஆப்பிரதேசத்தின் மூலைமுடுக்குகள் அனைத்தும் அத்துப்படியான உள்ளூர் போராளியான கந்தையாவிடம், போராளிகளுக்கு வழிகாண்பிக்கும் பொறுப்பை ஒப்படைத்திருந்தார். எந்தவிதச் சேதமும் இல்லாமல், ஒரு துப்பாக்கிவேட்டைக் கூடத் தீர்க்காமல் அத்தனை முக்கியஸ்தர்களும், போராளிகளும் அந்த இடத்தை விட்டு இரகசியமாக, பாதுகாப்பாக வெளியேறினார்கள். இதையறியாத இந்தியப் படையினர், புலிகள் தங்கியிருந்த அந்த வீட்டை நாலாபுறமும் சுற்றிவழைத்தார்கள். பாதுகாப்பாக நிலையெடுத்து முற்றுகையிட்டார்கள்.

ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர் ஒருவர்தான் இந்தியப் படையினருக்கு வழி காண்பித்து அவர்களை அங்கு அழைத்து வந்திருந்தார். வீட்டை சுற்றி வியூகம் அமைத்த இந்தியப் படையினர் உள்ளிருப்பவர்களைக் குறி வைத்து நிலை எடுத்தார்கள். ஏராளமான இந்தியப் படையினர் சுற்றிவளைத்து நிலையெடுத்து சுடுவதற்கு தயார் நிலையில் இருக்க, ஒரு இந்தியப் படை அதிகாரி உள்ளிருப்பவர்களை வெளியே வருமாறு அறிவித்தலை விடுத்தார். உள்ளிருந்து எவரும் வெளிவரவில்லை. மறுபடியும் மறுபடியும் அந்த அதிகாரி ஹிந்தியில் உரக்க கத்தினார். அருகில் காட்டிக்கொடுக்கும் பணிக்கென்று வந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினரை அழைத்து அவரையும் தமிழில் கத்தும்படி உத்தரவிட்டார். அந்த உறுப்பினரும் தொண்டை கிழியக் கத்தினார். எந்தப் பலனும் இல்லை. வீட்டில் இருந்து எவரும் வெளியில் வரவில்லை. எந்த சத்தமும் உள்ளிருந்து வெளிவரவில்லை. அதிகாரிக்கு கோபம் உச்சத்திற்கு ஏறியது. சுடும்படி உத்தரவு பிறப்பித்தார்.

வீட்டைச் சுற்றிவழைத்த இந்தியப் படையினர் சகட்டுமேனிக்குச் சுட்டுத்தீர்த்தார்கள். உள்ளிருந்து எந்தச் சஞ்சலமும் இல்லை. துணைக்கு வந்த ஈ.பி.ஆர்.எல். உறுப்பினரை வீட்டிற்குச் சென்று சோதனையிடும்படி அந்த இந்திய அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். பயத்துடனும் அதேவேளை தனது எஜமான் விசுவாசத்தைக் காண்பிக்கும் நாயைப் போலவும் விரைந்த அந்த உறுப்பினர் உள்ளே எவரும் இல்லை என்ற விடையத்தை கூறினார். இந்திய அதிகாரிக்கு கோபம் ஒருபக்கம், வெட்கம் ஒரு பக்கம். அந்த வீட்டின் சொந்தக்காரரை பிடித்துவர உத்தரவிட்டுவிட்டு, அயல் வீட்டார் சிலரையும் நையப்புடைத்துவிட்டு முகாம் திரும்பினார்.

நெல்லியடி வீட்டில் இருந்து மயிரிழையில் தப்பிய பொட்டு அம்மானின் உடல் நிலை மேலும் மோசமானது. அவர் உயிர் பிழைப்பாரா என்கின்ற சந்தேகம் மற்றப் போராளிகளுக்கு ஏற்பட்டது. இது போன்ற சுற்றிவழைப்புகள், தேடுதல்கள் இனிவரும் காலத்தில் யாழ்குடா எங்கிலும் தொடர்ந்து நடைபெறும் என்பதால், இந்த நிலையில் பொட்டம்மானை அங்கு பாதுகாப்பது மிகவும் கஷ்டம் என்பதை மற்றய போராளிகள் உணர்ந்தார்கள். அவர் உயிர் பிழைக்கவேண்டுமானால் , அவர் யாழ்குடாவை விட்டு வெளியேறி, மருத்துவப் பராமரிப்பும், ஓய்வும் பெறுவது அவசியம் என்று பொறுப்பாளர்களுக்குப் புரிந்தது. பொட்டம்மானின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவரை கடல்கடந்து தமிழ் நாட்டிற்குக் கொண்டு செல்வது என்று தீர்மாணித்தார்கள். ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அவரை மருத்துவ சிகிட்சைக்காகக் கொண்டுசெல்லவும் செய்தார்கள்…

(தொடரும்…… )

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *