அமெரிக்காவில் மே மாதத்துக்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா தடுப்பூசி – ஜோ பைடன்

அமெரிக்காவில் மே மாதத்துக்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா தடுப்பூசி – ஜோ பைடன்

உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் மற்றும் அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்கா இருக்கிறது.

அங்கு கொரோனா பாதிப்பு 3 கோடியை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல் கொரோனா உயிரிழப்பு 5 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.‌

எனினும் அமெரிக்காவில் வைரஸ் பரவி வரும் அதே வேகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

தனது பதவிக் காலத்தின் முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை செயல்படுத்தி வருகிறார்.‌

ஏற்கனவே பைசர் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள 2 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், 3-வதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் திட்டமிட்டதைவிட தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருவதால் வருகிற மே மாதத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடைய அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் சூளுரைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘மே மாத இறுதிக்குள் அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு வயது வந்தோருக்கும் போதுமான தடுப்பூசி வழங்குவதற்கான பாதையில் நாங்கள் இருக்கிறோம். அதேபோல் நாடு முழுவதும் அதிகமான பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாத இறுதிக்குள் அனைத்து கல்வியாளர்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை வழங்க வேலை செய்து வருகிறோம்’’ எனக் கூறினார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *