பொட்டம்மான் வருவாரா? (பாகம் 5)

பொட்டம்மான் வருவாரா? (பாகம் 5)

சண்முகலிங்கம் சிவசங்கர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவர். புலனாய்வுத்துறை பொறுப்பாளர். யாழ்ப்பாணம் அரியாலை நாயன்மார்கட்டுப் பகுதியைச் சேர்ந்த இவர் சிறு வயதில் இருந்தே தமிழீழ விடுதலையை இலட்சியமாகக் கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளராக விளங்கியுள்ளார். பொட்டு அம்மான் குடும்பத்திற்குச் சொந்தமான நாயன்மார்கட்டிலுள்ள பழைய வீடொன்றில் தேசியத்தலைவர், சீலன், புலேந்தி, ரகுவப்பா, நான் உட்பட சிலர் 1981 மே மாத காலப்பகுதியில் தலைமறைவாக வாழ்ந்திருக்கின்றோம். தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து நாங்கள் அங்கு வாழ்ந்தோம். அந்த வீட்டை ஒழுங்கு பண்ணிக் கொடுத்ததோடு அக்காலப் பகுதியில் இயக்கத்தோடு இணைந்து எம்மோடு தங்கியிருந்தார் பசீர் காக்கா.

82 காலப்பகுதியிலும் அந்த வீட்டிலேயே எம்மவர்கள் தங்கியிருந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.அப்போது ஒரு நாள் தங்கள் வீட்டுத் தென்னை மரத்தில் ஏறிய பொட்டு அம்மானுக்கு அந்தப் பழைய வீட்டின் ஜன்னலூடாக ஒரு காட்சி தென்பட்டுள்ளது.அங்கு அறையில் இருந்தவர்கள் துப்பாக்கிகளை கழற்றி சுத்தம் செய்யும் காட்சி தென்பட்டுள்ளது. பல நாட்களாகவே தங்கள் பழைய வீட்டில் தங்கியிருப்பவர்கள் யார்? அவர்கள் என்ன செய்கின்றார்கள்? என்ற வினாக்கள் அவர் மனதில் இருந்து வந்துள்ளது. அந்தக் காலப்பகுதியில் பொட்டு அம்மான் அருகாமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த கராத்தே வகுப்புக்குச் சென்று கராத்தே பயின்று வந்துள்ளார். அந்த வகுப்புக்கு அந்த இளைஞர்களில் சிலரும் வந்து கராத்தே பயின்று வந்துள்ளனர்.அவர்களோடு சிறிது சிறிதாக அறிமுகமாகிக் கொண்டார் பொட்டு அம்மான்.பின் ஒரு நாள் இவர் அந்த வீட்டுக்குச் சென்றபோது அங்கு சங்கர் (சத்தியநாதன்) இருந்துள்ளார். அம்மான் சங்கரிடம் தானும் அவர்களது அமைப்பில் சேர விருப்பம் தெரிவித்து அவர்களோடு இணைந்து கொண்டுள்ளார். அதன் பிறகு அவரது செயற்பாடுகளில் பங்கேற்று வந்த அம்மான் விசுவமடுக் காட்டில் நடைபெற்ற புலிகளின் இரண்டாவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றுள்ளார்.

83 ஆடிக் கலவரத்தைத் தொடர்ந்து தலைவர் அவர்களோடு தமிழகம் வந்து சேர்ந்த இளைஞர்களில் ஒருவரான பொட்டு அம்மான் நவம்பரில் ஆரம்பமான இந்தியா வழங்கிய முதலாவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றுத் திரும்பினார். லெப்டினன்ட் கேணல் குமரப்பா மட்டக்களப்பு மாவட்ட தளபதியாகச் செயற்பட்ட காலத்தில் அவருக்கு உற்ற துணைவனாக இருந்து செயற்பட்டவர் பொட்டு அம்மான்.

1987 செப்டெம்பர் 26 திலீபனின் தியாக மரணம், ஒக்டோபர் 5இல் குமரப்பா, புலேந்திரன் ஆகியோரின் தியாகச் சாவுகளைத் தொடர்ந்து ஒக்டோபர் இந்திய விமானங்களின் குண்டுவீச்சுக்கள் என்பனவற்றின் தொடர்ச்சியாக ஒக்டோபர் 12ஆம் நாளன்று, யாழ் கொக்குவில் பிரம்படிப் பகுதியில் தேசியத்தலைவர் வசிப்பதாக இலங்கை உளவுப்பிரிவு வழங்கிய தகவலைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் தலைவரைக் கைது செய்யும் நோக்கில் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மைதானத்தில், நள்ளிரவு வேளையில் சிறிலங்கா விமானப் படையின் உலங்குவானூர்திகள் சூட்டாதரவு வழங்க இந்திய இராணுவத்தின் சீக்கியப் படைப்பிரிவு ஒன்று
உலங்குவானூர்தி மூலம் தரையிறக்கப் பட்டது.அங்கு விடுதலைப்புலி வீரர்கள் மேற்கொண்ட உக்கிரமான தாக்குதலில் தரையிறக்கப்பட்ட 30 சீக்கியர்களின் 29 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் உயிரோடு கைது செய்யப்பட்டார். இந்த தாக்குதலின்போது பொட்டு அம்மானுக்கு வயிற்றில் குண்டு பாய்ந்ததோடு கை ஒன்றிலும் காயம் ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வழிமறிப்புச் சமர்களில் மேஜர் ஜேம்ஸ் உட்பட சிலர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் மந்திகை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தியப் படைகள் வடமராட்சிப் பகுதிக்குள் முன்னேறும் முயற்சியை மேற்கொண்டன. முன்னேறி வரும் அவர்களின் முதல் இலக்கு மருத்துவ மனைகளாக இருக்கும் என்பதனால் பொட்டு அம்மானும் சில போராளிகளும் அங்கிருந்து இடம் மாற்றப்பட்டு வல்வையில் வாழ்ந்து கொண்டிருந்த கிட்டம்மாவின் பொறுப்பில் ஒப்படைக்கப் பட்டனர்.

கிட்டம்மா அவர்கள் காயப்பட்டவர்களை குளிப்பாட்டி சிகிச்சை செய்து
பராமரித்து வந்தார். ஒரு நாள் பொட்டு அம்மானை கிட்டம்மா குளிப்பாட்டிக் கொண்டிருந்த வேளையில், அந்த வீட்டை இந்தியப்படை சுற்றி வளைத்துக் கொண்டது. வீட்டினுள் நுழைந்த படையினரில் சிலர் கிணற்றடிப் பக்கம் வருவதை அவதானித்த கிட்டம்மா பலத்த குரலில் “ஆரடா பெண்கள் குளிக்கிற இடத்துக்கு வாறது? என்று சத்தமிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்தியப்படைகள் அங்கிருந்து அகன்று சென்றன. தொடர்ந்து பொட்டு அம்மானை அங்கு வைத்து சிகிச்சை வழங்குவது ஆபத்தானது, எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்பதனால் அவர் தமிழகத்திற்கு அழைத்துவரப்பட்டு இங்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் பூரண குணமடைந்தபின் நாடு திரும்பினார்.

நாடு திரும்பிய அவர் 89 கால கட்டத்தில் யாழ் மாவட்டத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றிக் கொண்டிருந்தார்.89 இன் இறுதியில் அப்பொறுப்பில் இருந்து பொட்டம்மான் நீக்கப்பட்டு பானு அவர்கள் யாழ் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். காரணம் சொல்லப்படாமல் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பொட்டு அம்மான் தேசியத்தலைவர் அவர்களால் பாலமோட்டைக் காட்டுக்கு அழைக்கப் பட்டிருந்தார். தனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் புலனாய்வுக்கான திறமையையும் ஆளுமையையும் வெளிப்படுத்தி செயற்பட்டு வந்த பொட்டு அம்மான் அவர்கள் தேசியத் தலைவர் அவர்களால் புலனாய்வுத் துறையின் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டார். லெப்டினன்ட் கேணல் சூட்டி, லெப்டினன்ட் கேணல் மாதகல் ராஜன், மாதவன் மாஸ்டர், கபிலம்மான் ஆகியோர்களைக் கொடுத்த தலைவர் அவர்கள் புலனாய்வுத் துறையைக் கட்டியெழுப்ப வேண்டிய மாபெரும் பணியை பொட்டு அம்மானிடம் ஒப்படைத்தார் தேசியத்தலைவர்.

1990 பெப்ரவரி மாத இறுதி நாட்களில் தேசியத்தலைவரின் அழைப்பின் பேரில் மணலாற்றுக் காட்டுக்கு வந்து சில நாட்கள் தங்கி தலைவரோடு வாழ்ந்திருந்த திரு.கோவை ராமகிருஷ்ணன் அவர்கள் தமிழகத்திற்கு வருவதற்காக புறப்பட்ட வேளையில் தலைவர் அவர்கள் என்னை அழைத்தார். ” அண்ணா ராமகிருஷ்ணன் அண்ணை தமிழ்நாட்டுக்கும் திரும்பிறார். நீங்களும் போங்கோ. ஒரு மாதம் லீவு தாறன்.அங்கை போய் அக்கா பிள்ளைகளோடை தங்கி இருந்திட்டு திரும்பி வந்திடுங்கோ.அதுக்குப் பிறகு எங்களுக்கு நிறைய வேலையள் இருக்கு” என்று கூறியவர் முன்பே தயார் பண்ணி வைத்திருந்த ஒரு தொகைப் பணத்தையும் கொடுத்து “பிள்ளையளுக்கு யாழ்ப்பாணத்தில ஏதாவது வாங்கிக்கொண்டு போங்கோ” என்று கூறி என்னை அனுப்பி வைத்தார். அதன்படி கோவை ராமகிருஷ்ணன்
அவர்களோடு புறப்பட்டு வந்த நான் சென்னையில் மனைவி, பிள்ளைகளோடு தங்கிவிட்டு மீண்டும் ஈழத்திற்குச் சென்றேன்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *