பொட்டம்மான் வருவாரா? (பாகம் 6)

பொட்டம்மான் வருவாரா? (பாகம் 6)

நான் செல்லும்போது சிறுவயதில் இருந்து தலைவர் அவர்களின் கண்காணிப்பில் வளர்ந்து வந்த எங்கள் மூத்த மகளையும் இயக்கத்தில் இணைப்பதற்காக கூட்டிச் சென்றேன். அப்போது அவளுக்கு வயது பதினாறு. நான் 90 மார்ச் பிற்பகுதியில் ஈழத்திற்குச் சென்றபோது தலைவர் அவர்கள் நன்கு பயிற்சிகள் பெற்ற ஆயிரக்கணக்கான போராளிகளோடு யாழ் மண்ணில் பாதம் பதித்திருந்தார். நான் சென்றபோது தலைவர் அவர்கள் சாவகச்சேரிப் பகுதியில் தங்கி இருந்தார். அங்கு சென்று அவரைச் சந்தித்து மகளை அவரிடம் கையளித்தேன். மகளை சுகம் விசாரித்த பின், “அண்ணா இவவைக் கொண்டு போய் காட்டுக்குள்ளை செஞ்சோலை முகாமிலை ஜனனியிடம் ஒப்படைச்சிட்டு வாங்கோ” என்று கூறி எங்களை அனுப்பி வைத்தார். நான் அவ்விதம் கானகம் சென்று ஜனனியிடம் மகளை ஒப்படைத்துவிட்டுத் திரும்பினேன். தலைவர் அவர்களின் பணிமனை அப்போது சங்கத்தானை முருகன் கோவிலுக்குச் சமீபமாக செயற்படத் தொடங்கியிருந்தது. அங்கு சென்ற நான் எனக்கான அலுவலகப் பணிகளை பொறுப்பேற்றுக் கொண்டேன். தலைவர் அவர்களின் தட்டச்சு வேலைகள் உட்பட அலுவலகச் செயலராகவும் நான் என் பணிகளைச் செய்ய ஆரம்பித்தேன். அந்தக் காலகட்டத்தில்தான் முதன் முதலில் பொட்டு அம்மானுக்கும் எனக்குமான நெருங்கிய பழக்கம் ஆரம்பமானது. அங்கு தலைவர் அவர்களைச் சந்திக்க வரும் தளபதிகள் முதலில் என்னிடம் கேட்பது, “அண்ணா நாடு குழம்பியிருக்கோ… என்ன மாதிரி?” என்றுதான். எனது பதிலை அறிந்து அதற்கேற்ற விதமாக ஒருவித தயார்படுத்தலுடன் அவர்கள் தலைவரின் அறைக்குள் செல்வார்கள்.

தேனிசை செல்லப்பா அவர்கள் இயக்கத்தின் அழைப்பின் பேரில் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக ஈழம் வந்திருந்த சமயத்தில் கலை, பண்பாட்டுக் கழகத்தின் பொறுப்பாளராகச் செயற்பட்டுவந்த கவிஞர் புதுவை ரத்தினதுரை அவர்கள் தலைவரிடம் என்னை தனக்கு உதவியாக தந்துதவுமாறு கேட்டுக் கொண்டார். செல்லப்பா அண்ணர் அவர்கள் மீண்டும் யுத்தம் ஆரம்பமாகப் போகின்ற சூழ்நிலையில் சாவகச்சேரிப் பணிமனைக்கு தலைவர் அவர்களால் அழைக்கப்பட்டிருந்தார். செல்லப்பா அண்ணர் அவர்களுக்கும், அவரது குழுவினர்க்கும் விருந்துபசாரம் வழங்கப்பட்டதோடு தலைவர் அவர்களால் அவர்கள் அனைவர்க்கும் கௌரவம் வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியை முடித்த கையோடு அவர்களை அழைத்துச் சென்று வல்வை ரேவடிக் கடற்கரையில் படகேற்றிவிட்டுத் திரும்பினோம்.

யுத்தம் ஆரம்பமாகிய காலகட்டத்தில் கலை, பண்பாட்டுக் கழகத்தின் துணைப் பொறுப்பாளராக பணியாற்றும்படி தலைவர் அவர்கள் என்னை அனுப்பி வைத்தார். தலைவரின் தலைமைச் செயலகத்தில் ஆரம்பித்த பொட்டம்மானுக்கும் எனக்குமான உறவு தொடர்ந்து கொண்டே இருந்தது. கலைபண்பாட்டுக் கழகத்திற்கு வருகை தரும் பொட்டு அம்மான் அவர்கள் என்னோடும் உரையாடிவிட்டே செல்வார். புலனாய்வுத்துறையில் மட்டுமன்றி பன்முக ஆற்றல்களைக் கொண்டிருந்த பொட்டு அம்மான் அவர்கள் சிறந்த கலாரசிகரும்கூட. அக்காலகட்டத்தில் புலிகளின் குரல் வானொலிக்கென மாமனிதர் பொன்.கணேசமூர்த்தி அவர்கள் எழுதி
என்னால் தயாரிக்கப்பட்டு தொடர்ந்து 53 வாரங்கள் ஒலிபரப்பான ‘இலங்கைமண்’ நாடகம் பொட்டு அம்மானின் அபிமானத்தைப் பெற்றிருந்தது. தொடர்ந்து வாராவாரம் அதனைச் செவிமடுத்து ரசித்து வந்த பொட்டு அம்மான் அவர்கள் அந்நாடகம் பற்றி அதன் சிறப்புக்கள் பற்றி கலைஞர்களின் திறமை பற்றி என்னைச் சந்திக்கும் வேளைகளில் எல்லாம் எம்மைப் பாராட்டத் தவறுவதில்லை. ‘இலங்கை மண்’ நாடகம் வெற்றிகரமாக ஒலிபரப்புக் செய்யப்பட்டு முடிந்தபின் அதில் பங்கேற்று நடித்த கலைஞர்கள் உட்பட திரு.பொன்.கணேசமூர்த்தி அவர்களுக்கும் சிறப்புச் செய்ய வேண்டும் என நான் தீர்மானித்தேன். அந்நாடகத்தை கேட்டு ரசித்து வந்த சுன்னாகத்தில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வந்த இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான வர்த்தகப் பிரமுகர் ஒருவர் அதனை சிறப்பாக நடத்தும்படியும் அதற்கான முழுச் செலவையும் தான் பொறுப்பெடுக்க முன்வந்தார். அதற்கான முன்னெடுப்புக்களை கலை, பண்பாட்டுக் கழகத்தினராகிய நாம் முன்னெடுத்தோம். நல்லூர் இளங்கலைஞர்மன்ற கலாமண்டபத்தில் அதனை நடாத்துவதென முடிவு செய்தோம். அவ்விழாவின் சிறப்புப் பேச்சாளர்களாக திரு.பொன். கணேசமூர்த்தி மற்றும் இலங்கை கம்பன் கழகத்தின் நிறுவனர் கம்பவாருதி இ.ஜெயராஜ் ஆகியோர் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தனர்.அவ்விழாவின் சிறப்பு விருந்தினராக பொட்டு அம்மான் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பிய நான் அதற்கான அனுமதி கேட்டு அவருக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தேன்.

அண்ணா, வணக்கம். ‘இலங்கை மண்’ நாடக கலைஞர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வில் என்னை சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிக்க வேண்டுமென கேட்டிருந்தீர்கள். நன்றி. அந்த நாடகத்தை தொடர்ந்து நான் கேட்டு வந்துள்ளேன். அதன் சிறப்புக்கள் பற்றி உங்களை சந்திக்கும் வேளைகளில் தெரிவித்தும் உள்ளேன். முதலில் அதில் பங்கேற்ற கலைஞர்கள் அனைவர்க்கும் எனது பாராட்டுக்கள். நான் செய்யும் பணியைப் பொறுத்து அது போன்ற நிகழ்வில் மேடையில் கலந்து கொள்வது சிறப்புடையது அல்ல. அதனால் அந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகின்றேன். ஆயினும் அந்த நிகழ்வில் சாதாரண ஒரு பார்வை மாற்றாக நான் கலந்து கொள்வேன் என அறியத் தருகின்றேன் நன்றி. என எனக்கு பதில் கடிதம் அனுப்பியிருந்தார். அத்துடன் நின்றுவிடவில்லை அவர்.விழாவின்போது நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்பே தனது பிரிவு உறுப்பினர்களோடு வந்து சேர்ந்த அவர், நிகழ்வுகள் ஆரம்பமாகி முடியும்வரை பார்வை யாளர்கள் போன்று ஒரு ஒதுக்குப் புறமாக உட்கார்ந்து பார்த்துவிட்டே சென்றார். அங்கிருந்து செல்வதற்கு முன் வானொலி நாடகத்தில் பங்கேற்ற கலைஞர்கள் அனைவரையும் பாராட்டிவிட்டே சென்றார். நிகழ்வு சிறப்புற நடந்தேறிய மகிழ்ச்சியை விட பொட்டு அம்மான் வருகை தந்து இறுதிவரை உட்கார்ந்து இருந்து நிகழ்ச்சியைக் கண்டு களித்ததோடு கலைஞர்கள் எம்மைப் பாராட்டிச் சென்றமை எமக்கு பெருமகிழ்ச்சியைத் தந்தது.

94 ஏப்ரலில் எனது வானொலி நாடகம் ‘மண்ணுக்காக’ கதையை வீடியோ படமாக தயாரித்திருந்தோம். அதனையும் பார்த்துவிட்டு எமக்கு பாராட்டுக் கடிதம் அனுப்பியிருந்தார். அதன் பிறகு ஒரு நாள் பொட்டு அம்மானின் பிரிவைச் சேர்ந்த ஒரு தம்பி என்னைத் தேடி வந்தார். “அம்மான் உங்களிடம் சொல்லி புலனாய்வுப் பிரிவுடன் தொடர்பு பட்டதாக ஒரு குறும்படம் செய்யச் சொல்லி இருக்கின்றார்” என்றார். “கதைக்கரு எப்படி அமைய வேண்டும்?” என அவரிடம் வினவினேன். “புலனாய்வுத்துறையில் இரகசியம் காத்தல் முக்கியமானது.அதை அடிப்படை யாக வைத்துச் செய்யுங்கள்” என்று கூறி என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தார். உடனடியாக அதற்கான திரைக்கதைப் பிரதியைத் தயார் செய்து அம்மானுக்கு அனுப்பினேன். அதனைப் படமாக்கலாம் என சம்மதம் தெரிவித்தார். புலனாய்வுத் துறையின் வெளியக புலனாய்வு நடவடிக்கைகளுக்காக கொழும்பு போன்ற ஈழத்திற்கு வெளியே இரகசிய நடவடிக்கைகளுக்குப் செல்லும் ஒரு போராளியை மையமாக வைத்து கதையை அமைத்திருந்தேன். அதனை இயக்கும் பொறுப்பை எனது நண்பரும் மாமனிதருமான பொன்.கணேசமூர்த்தி அவர்களிடமே ஒப்படைத்திருந்தேன். அதில் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக நான் நடித்திருந்தேன்.

வெளியக புலனாய்வு வேலைகளுக்காக தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு பொறுப்பாளர் திட்டங்களை விளக்கி எந்தக் கட்டத்திலும் இரகசியம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதையும், ஒரு சிறு தவறு நேர்ந்தாலும் மிகப்பெரிய ஆபத்துக்களைச் சந்திக்க நேரிடும் என்பதையும் எடுத்துச் சொல்லிய பின் ஒரு போராளி முக்கிய நடவடிக்கை ஒன்றிற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார். அங்கு அந்தப் போராளி முன்பு இயக்கத்தில் இருந்து விலத்திச்சென்ற இவரின் நண்பர் ஒருவரைச் சந்திக்கின்றார். அவர்கள் இருவரும் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் சாப்பிடு கின்றனர். நண்பன் போராளியை தன்னோடு வருமாறு அழைக்க மறுக்கும் போராளி தான் வந்த காரணத்தை வெளிப்படையாக, வெகுளித்தனமாக நண்பனிடம் கூறிவிடுகின்றான். அவர்களுக்குப் பின்புற மேசையில் அமர்ந்திருந்த சிங்களவன் ஒருவன் கண்காணித்துள்ளான். சாப்பிட்டு முடிந்து நண்பர்கள் இருவரும் வெளியேறும்போது வாசலில் நின்றிருந்த இருவர் இவர்களைக் கழுத்தைப் பிடித்து தள்ளி பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்கின்றனர். இரகசிய இடம் ஒன்றில் இவர்களுக்கு நடைபெற்ற சித்திரவதைகளின்போது போராளி சயனைட் குப்பியைக் கடித்து மரணம் அடைகின்றான்.

தொடரும் …….

தமிழகத்திலிருந்து தேவர் அண்ணா.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *