இனப்படுகொலையை நிகழ்த்தியும் அதை அரங்கேற்றியவர்களை காப்பாற்றியும் வரும் இலங்கை அரசிற்கு, மேலும் இன்னுமொரு கால அவகாசத்தை வழங்குவதை சர்வதேச நாடுகள் நிறுத்துவதோடு, இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து! என்ற ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றைக்குரலாய் பசித்திருந்து நீரை மட்டும் அருந்தி நீதிக்காய் போராடும் அம்பிகையின் அறப்போர் ஒருவாரத்தை கடந்த நிலையிலும் தொடர்கிறது.
பிரித்தானிய அரசிடம் நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் அவர் உண்ண மறுத்து வரும் நிலையில் பிரித்தானியா அரசு அம்பிகையின் கோரிக்கைகளுக்கு தொடர்ந்தும் மௌனம் காத்து வருவது உலக நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்க சர்வதேசம் முனைந்துள்ளமையை எதிர்த்து இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக்கோரி நான்கு அம்சக்கோரிக்கைகளை பிரித்தானிய அரசிடம் முன்வைத்து திருமதி. அம்பிகை செல்வகுமாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அகிம்சை வழியிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 8 ஆவது நாளை (06.03.2021) எட்டியுள்ளது.
ஒருவாரம் கழிந்துள்ள நிலையில் அம்பிகையின் உடல் நிலை மிகவும் சோர்வுற்று குரல் தளர்வடைந்துள்ள நிலையிலும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அகிம்சை வழியில் உயிர் தியாகிகளான திலீபன், அன்னை பூபதி ஆகியோரை வணங்கி அவர் இன்றைய நாளினை தொடர்ந்துள்ளார்.
தனது கோரிக்கைகளில் ஒன்றையாவது பிரித்தானிய அரசு நிறைவேற்ற வேண்டும் அதுவரை தனது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளதுடன் உலகெங்கிலுமுள்ள அனைத்து தமிழ் மக்களையும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் கோரிக்கைகளை நிறைவேற்ற தத்தம் நாட்டு பிரதிநிதிகழுக்கு அழுத்தங்களை கொடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
இந்நிலையில் அம்பிகையின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் நடைபெற்று வரும் மெய்நிகர் நிகழ்வில் இன்று சனிக்கிழமை தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் மற்றும் தமிழகத்திலிருந்து இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், இந்திய உச்ச நீதி மன்ற வழக்கறிஞரும் தில்லி தமிழ் வழக்கறிஞர் சங்கத்தின் செயலருமான ராம் சங்கர் மற்றும் பெண்கள் சார்பில் கண்மணி ஆகியோர் விசேட உரைகள் ஆற்றவுள்ளதுடன் மும்மத தலைவர்கள் மற்றும் தமிழக, புலம்பெயர் அரசியல்வாதிகள் செயற்பாட்டாளர்கள் என பலர் உரையாற்றவுள்ளனர்.
இதேவேளை இன்று விசேடமாக அம்பிகையின் போராட்டத்திற்கு வலுச்சேர்த்து பிரித்தானிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரித்தானியாவில் மாபெரும் வாகனப்பேரணி ஒன்றும் இடம்பெறவுள்ளது. பிரித்தானிய நேரம் 12 மணிக்கு Rosr Green Park Kingsbury Road NW9 9PG என்னும் இடத்திலிருந்து இந்த பேரணி ஆரம்பமாகவுள்ளது
நேற்றைய 7 ஆம் நாள் மெய்நிகர் (zoom) நிகழ்வு
லண்டன் அருள்மிகு நடராஜ திருக்கோவிலின் பிரதம குருக்கள் சிவஶ்ரீ பஞ்சாட்சர சோமசுந்தர குருக்கள், உடுப்புக்குளம்- முல்லைத்தீவு பங்குத்தந்தை வணபிதா வசந்தன் மற்றும் பிரித்தானியாவிலிருந்து அருட்தந்தை செபநேசன் ஆகியோரின் வாழ்த்து செய்திகளுடன் ஆரம்பமானதுடன் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரத் தோமஸ், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், தமிழ்த்தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஆ.மு. சிவாஜிலிங்கம், தமிழகத்திலிருந்து அரசியல் ஆய்வாளர் அய்யநாதன், இளம் தமிழக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பைச் சேர்ந்த தோழர் செந்தில் மற்றும் இனப்பற்றாளர் திரு.பரராஜசிங்கம் ஆகியோர் விசேட உரைகளை நிகழ்த்தினர்.
இதில் விசேடமாக பிரித்தானிய Harrow west தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் ஹரத் தோமஸ், அம்பிகையின் நீதிக்கான உணவுதவிர்ப்பு போராட்டத்தை பாராளுமன்றத்திற்கு தெரியப்படுத்தி பிரித்தானிய அரசிற்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்தார்
8 ஆவது நாளாகிய இன்றைய மெய்நிகர் நிகழ்வு வழமை போல் பிரித்தானிய நேரம் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வில் நீங்களும் இணைந்து அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்க பின்வரும் இணைப்பில் இணைந்துகொள்ளலாம் .https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09