பொட்டம்மான் வருவாரா? (பாகம் 7)

பொட்டம்மான் வருவாரா? (பாகம் 7)

‘படிப்பினை’ என்ற பெயரில் ஏழு நிமிடங்கள் கொண்ட குறும்படமாக தயாரித்திருந்தேன். அப்போது கலை, பண்பாட்டுக் கழகத்திலும், புலனாய்வுப் பிரிவிலும் வேலை செய்த கிருபா படப்பிடிப்பு, படத்தொகுப்பு என்பனவற்றை சிறப்பாகச் செய்திருந்தார். ஒரு வார காலத்திற்குள் பொட்டு அம்மானின் ‘படிப்பினை’ குறும்படப் பிரதி கையளிக்கப்பட்டது. அந்த குறும்படம் பொட்டு அம்மான் அவர்களுக்கு நன்கு பிடித்திருந்தது. எங்களை அழைத்துப் பாராட்டுவதற்கு அவர் மறக்கவில்லை.அது மாத்திரமன்றி புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அனைத்துப் போராளிகளுக்கும் அது தொடர்ந்து காண்பிக்கப்பட்டது வந்தது.

இயக்கத்தை விட்டு வெளியே வந்த பின் மல்லாவியில் வசித்து வந்தோம். 2001 ஆம் ஆண்டு நான் கொழும்புக்குச் செல்வதற்காக போக்குவரத்துக் கண்காணிப்புப் பிரிவுக்கு விண்ணப்பம் கொடுத்திருந் தேன். சில நாட்களில் புலனாய்வுத் துறையின் வெளியகப் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த துரோணர் அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தார். “இப்ப நிலைமை சரியில்லை. தேவர் அண்ணாவை அவசரப்பட வேண்டாம். நிலைமை சரியானதும் அனுப்பலாம் என அண்ணை அறிவிச்சவர் எண்டு அம்மான் சொல்லிட்டு வரச்சொன்னார்” என்றார். துரோணர். அப்புறம் 2002ஆம் ஆண்டளவில் துரோணரே மீண்டும் வீட்டுக்கு வந்து பயணத்திற்கான அனுமதிப்பத்திரத்தை தந்து சென்றார்.

கொழும்பில் ஒரு மகளும் மனைவியும் இருந்தார்கள். நானும் ஒரு மகளும் மகனும் மல்லாவியில் வசித்து வந்தோம். நான் கொழும்புக்கும் வன்னிக்குமாக போய் வந்து கொண்டிருந்தேன். அந்தக் காலகட்டத்தில் ஒரு நாள் துரோணரே வீட்டுக்கு வந்தார்.” அம்மான் உங்களட்டை ஒரு பொறுப்பைக் கொடுத்து செய்ய முடியுமோ என்று கேட்கச் சொன்னவர்” என்றார். நான் எதுவித தயக்கமும் இன்றி ” அம்மானுக்கோ, புலனாய்வுத்துறைக்கோ எதையும், எப்பவும் செய்வதற்கு நான் ஆயத்தமாக இருக்கின்றேன்” என்றேன். தங்களது போராளிகள் சிலருக்கு சிங்களம் கற்பிக்க வேண்டும் என்றார் , நான் “எப்போ ஆரம்பிக்கலாம்? “என்றேன். “உடனடியாக செய்தால் நல்லம்” என்றார் அவர். நான் சிலரது எதிர்ப்புக்களையும் பொருட்படுத்தாது மல்லாவி, பாலிநகர், பாண்டியன் குளம் போன்ற பகுதிகளில் தனியார் கல்வி நிலையங்களில் சிங்களம் கற்பித்த அனுபவமும், புத்தகங்களும் கைவசம் இருந்த காரணத்தினால் அடுத்த நாளே ஆரம்பிக்கலாம் என்று கூறி துரோணரை அனுப்பி வைத்தேன்.

மறுநாள் காலையிலேயே துரோணரின் முகாமில் போராளி களுக்கான சிங்கள வகுப்பு ஆரம்பமாகியது. எனது மாணவர்கள் என்னைப் பார்க்க முடியும். எனக்கு அவர்களது முகங்களைப் பார்க்க முடியாது. நான் மட்டுமல்ல, போராளிகளும் மற்றைய போராளிகளின் முகங்களைப் பார்க்க முடியாது. ஒரு குடிலில் இருவர் தங்க வைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் மட்டும் குடிலின் உள்ளே ஒருவரை ஒருவர் பார்க்க முடியும்.குடிலை விட்டு வெளியே வரும்போது அவர்கள் முகத்திரையை அணிந்தபடியே வருவார்கள். வெளியே புலனாய்வுப் பணிகளுக்காக அவர்கள் அனுப்பப்படுவதன் காரணமாகவே அந்த நடவடிக்கை. கொழும்பு போன்ற இடங்களில் ஒருவர் கைதாகும் சந்தர்ப்பங்களில் சித்திரவதைகள் காரணமாக மற்றையவர்களைக் காட்டிக் கொடுத்து விடக்கூடாது என்பதற்காகவே அந்த ஏற்பாடு.

சில மாதங்கள் அந்த வகுப்பு நடைபெற்றது.அந்த வகுப்பு நிறைவடைந்த பின் ஒரு நாள் வீட்டுக்கு வந்த துரோணர் அவர்கள் ஒரு தொகைப் பணத்தை என்னிடம் தருவதற்கு முயற்சி செய்தார். ” இல்லைத் தம்பி, எனக்கு இயக்க கொடுப்பனவு மாதாமாதம் தமிழீழ வைப்பகத்தின் மூலம் வந்து கொண்டிருக்கு வேண்டாம்” என்று கூறி வாங்க மறுத்தேன். “இல்லையண்ணா, அம்மான் இதை கட்டாயம் உங்களிடம் சேர்ப்பிக்கச் சொன்னவர்” என்று கூறி என்னிடம் அந்தப் பணத்தை தந்துவிட்டுச் சென்றார்.

2004ஆம் ஆண்டளவில் சிறிலங்கா கலாச்சார அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை கலைக்கழகத்தின் ஒரு அங்கமான தேசிய நாடக சபையில்ஒரு செயற்குழு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பின் வன்னிக்கு சென்று வந்து கொண்டுதான் இருந்தேன்.2006 அளவில் வவுனியாவில் ஒட்டுக் குழுக்களின் தொல்லைகள் இருப்பதனால் வன்னிக்கு வரவேண்டாம் என் எனக்கு அறிவித்தல் வந்தது.அதன்பிறகு நான் வன்னிக்கு செல்லவில்லை. இயக்கத்தில் இணைந்த காலம்தொட்டு இறுதி நாட்கள் வரை தேசியத் தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராக அவரின் பாதுகாவலனாகவே பொட்டு அம்மான் வாழ்ந்து வந்தார்.

நாம் அனைவரும் அம்மான் வருவாரா என்ற ஏக்கத்துடன் தான் வாழ்ந்து வருகின்றோம். தேசியத்தலைவர் அவர்களின் உடல் என ஒரு உடலை சிறிலங்கா அரசு காட்டியது.அது அவரது உடல்தானா? என்ற சந்தேகமும் பலருக்கு உண்டு.தளபதிகள் பலரது உடலைக் காட்டிய சிங்கள அரசு பொட்டம்மானின் உடலைக் காட்டவே இல்லை. அது மட்டுமன்றி காலத்திற்கு காலம்பொட்டு அம்மான் ஹாங்காங்கில் இருக்கிறார்…. இத்தாலியில் இருக்கிறார், எரித்திரியாவில் இருக்கிறார் என்ற செய்திகள் வந்த வண்ணமே உள்ளன.

தமிழகத்திலிருந்து தேவர் அண்ணா.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *