அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு வயது வந்தோருக்கும் போதுமான தடுப்பூசியினை வழங்குவதற்கான பணியை மே மாத இறுதிக்குள் துரிதப்படுத்துமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு நாளான, நேற்று உரையாற்றிய போதே அவர் இந்த உத்தரவினை பிறப்பித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நாட்டை மீண்டும் மீள திறப்பது அல்லது இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான திகதியாக ஜூலை 4ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கை அடைய, மே 1ஆம் திகதிக்குள் அனைத்து அமெரிக்க பெரியவர்களும் கொவிட்-19 தடுப்பூசிக்கு தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும்.
ஆனால், இந்த இலக்கை அடைய, ஒவ்வொரு அமெரிக்கர்களதும் அர்ப்பணிப்பு எனக்குத் தேவை.
எனது நிர்வாகம் ஒரு நாளைக்கு 2 மில்லியன் தடுப்பூசிகளை எட்டுவதற்கும், 60ஆவது நாளில் 100 மில்லியன் தடுப்பூசிகளின் இலக்கை அடைவதற்கும் திட்டம் இட்டுள்ளது. இப்போது 10 நாட்கள் மட்டுமே உள்ளது. உலகின் வேறு எந்த நாடும் இதைச் செய்யவில்லை.
எதிர்பார்த்ததை விட இரண்டு மாதங்கள் முன்னதாக மார்ச் மாத இறுதிக்குள் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் அளவு தடுப்பூசியாவது போடப்படும். இது பாடசாலைகளை மீண்டும் திறக்க உதவும் என்றார்.