சிட்னி: ஆஸ்திரேலியாவில் பெய்து வரும் தொடர் கன மழையால், பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாமழை பெய்து வருகிறது. நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பல இடங்களில், மக்களை அச்சுறுத்தும் வகையில், அதிக அளவில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால், மக்கள் பீதிஅடைந்துள்ளனர். அவர்களிடம், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி, மாகாண நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.இடைவிடாமல், தொடர்ந்து மழை பெய்து வருவதால், பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. இதிலிருந்து வெளியேறும் உபரி நீரால், பல பகுதிகளில், வெள்ளம் சூழ்ந்துள்ளது.சிட்னி நகர மக்களுக்கு, குடிநீர் வழங்கும் வாரகம்பா அணையில், நீர் மட்டம் முழு கொள்ளளவை தாண்டியுள்ளது. கடந்த, 1990ம் ஆண்டிற்குப் பின், இந்த அணையில் இருந்து, நீர் நிரம்பி வழிய உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால், அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அவர்களை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுஉள்ளனர்.வடக்கு சிட்னியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களை நோக்கி, மக்கள் படையெடுத்து வருகின்றனர். மீட்புப் பணிகளில், நுாற்றுக்கணகான மீட்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்