ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க இந்தியா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் இந்த முடிவால் இலங்கைக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நாடுகளுள் ரஷ்யா மற்றும் சீனாவை மாத்திரம் நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருவதால் இந்தியா ஐநாவில் நடுநிலை வகிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளதென தெரியவருகிறது.
இதன்மூலம் இலங்கைக்கு அறிவுறுத்தல் செய்தி ஒன்றையும் இந்தியா வழங்கியுள்ளது. இலங்கை அதிகமான சீன சார்பு தன்மையை கடைப்பிடித்து வருவதால் இந்தியா சற்று அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதேவேளை, ஜெனிவாவில் இலங்கை தொடர்பான பிரேரணையில் வாக்களிக்காமல் விலகியிருப்பது இலங்கை அரசாங்கத்திற்கு பேரதிர்ச்சிக்குரிய தகவல்களாக அமைந்திருப்பதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.