தடைகள் விமர்சனங்கள் வந்தாலும் முன்னேறிச் செல்வேன்- கோட்டாபய சூளுரை!

தடைகள் விமர்சனங்கள் வந்தாலும் முன்னேறிச் செல்வேன்- கோட்டாபய சூளுரை!

ஐ.நா தீர்மானத்தின் மூலம் சர்வதேசத்திடம் பொறுக்கூற வேண்டிய கடப்பாடு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டிலுள்ள மக்களின் பிரச்சனைகளுக்கு அபிவிருத்தி மட்டுமே தீர்வு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.எவ்வாறான தடைகள் மற்றும் விமர்சனங்கள் வந்தாலும் மக்களுக்காக முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி சூளுரைத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,நுகேகொட வெளிபார்க் பூங்காவில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் இணை அமைப்பு பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து 16 மாதங்களே ஆன குறுகிய காலத்தில் நாட்டில் தெளிவான கொள்கை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தம்மிடம் இம்மாற்றத்தையே எதிர்பார்த்ததாகவும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்து கலாசாரம், பாரம்பரியம், தேசிய விழுமியங்கள் மற்றும் நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததாகவும் கூறியுள்ளார்.இக்காலத்திற்குள் உருவான பிரச்சனைகளுக்கன்றி கடந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட பிரச்சனைகளுக்கே அரசாங்கம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது எனவும் 19வது திருத்தத்தின் மூலம் உருவான தவறு அதில் ஒன்றாகும் எனவும் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

20வது திருத்தத்தை நிறைவேற்றி அத்தவறை திருத்தியதாக கூறிய ஜனாதிபதி, தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியதால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. அதைப்பற்றி விசாரணை செய்ய அவர்களே நியமித்த உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவுக்கு பொறுப்புக் கூற வேண்டிய நிலையும் எமது அரசாங்கத்திற்கே ஏற்பட்டுள்ளது என விசனம் வெளியிட்டுள்ளார்.MCC ஒப்பந்தத்தைப் போல் கிழக்கு முனையத்தை குத்தகைக்கு வழங்க ஒப்பந்தம் செய்ததும் கடந்த அரசாங்கம் எனவும் அது தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைக்கும் அரசாங்கம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது எனவும் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கை மற்றும் திட்டங்களை செயற்படுத்துவதுடன் கடந்த அரசாங்கம் ஏற்படுத்திய பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு அதிக நேரத்தை செலவழிக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.மரங்களை வெட்டுவதற்கோ சுற்றாடலை அழிப்பதற்கோ அரசாங்கம் எவ்வித அனுமதியும் வழங்கவில்லை எனவும், எதிர்க்கட்சி, நாட்டில் பாரிய காடழிப்பு இடம்பெறுவதாக பொய்யான பிரச்சாரங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *