இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதை ஐக்கிய மக்கள் சக்தி அனுமதிக்காது.அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை அதன் தற்போதைய வடிவத்தில் ஆதரிக்கத்தயார்.இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை இலங்கையில் அனைத்து மக்களும் ஒருமித்த நாட்டில் ஐக்கியமாக வாழ்வதையே குறிப்பதாக தெரிவித்தார்.வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் கவலைகளை அரசாங்கம் செவிமடுக்க வேண்டும்.
மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தகாலத்தில் நியமிக்கப்பட்ட கற்றல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (எல்.எல்.ஆர்.சி) பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்தவேண்டும்.நாட்டில் தீவிரவாதத்தை ஊக்குவித்ததன் விளைவாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானத்தின் மீதான வாக்குகளை அரசாங்கம் இழந்தது என்று அவர் தெரிவித்தார்.
எனினும், இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதை ஐக்கிய மக்கள் சக்தி அனுமதிக்காது.இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிப்பதை நாம் எதிர்க்கின்றோம்.”எங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆலோசனை தேவையில்லை,” என்று அவர் கூறினார்.உள்நாட்டு பொறிமுறையின் மூலம் இலங்கை தனது சொந்த பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
இருப்பினும், உள்நாட்டு பொறிமுறையானது சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.முன்னாள் அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் அனுமதி அளிக்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.இலங்கை தொடர்பான மற்றொரு தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தாக்கல் செய்யப்படுவதை தடுக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவும் தயார் என அவர் மேலும் தெரிவித்தார்.