கேரள மாநிலம் பத்தினம்திட்டா அருகே உள்ளது தண்ணிகோடு. இந்த பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் (வயது 28). இவரது தம்பி ஜெரின் (23). இவர்களது பெற்றோர் மளிகை கடை நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தம்பி ஜெரின் தான் ஆபரேசன் மூலம் பெண்ணாக மாற இருப்பதாக விருப்பம் தெரிவித்தார். இதற்கு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் உடல் ரீதியாக ஆணாகவும், மனரீதியாக பெண்ணாகவும் உள்ளேன். நான் பெண்ணாக மாறினால் தான் நிம்மதியாக இருப்பேன் என்று ஜெரின் வாதாடி வந்தார். தொடர்ந்து குடும்பத்தினர் நிராகரித்து வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று சகோதரர்கள் மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது இது குறித்து பேச்சு எழுந்தது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அண்ணன் அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து தம்பியின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த ஜெரின் ரத்தவெள்ளத்தில் சாய்ந்தார்.மயங்கி கிடந்த தம்பியை குளியல் அறைக்கு இழுத்துச்சென்று ரத்தத்தை சுத்தம் செய்து வேறு உடை போர்த்தி படுக்கையில் படுக்க வைத்தார். பின்னர் வெளியே ஜெஸ்டின் சென்று விட்டார். சிறிது நேரத்தில் அவரது தாய் வந்தார்.
மகன் படுக்கையில் மயங்கி கிடப்பதை அறிந்து அவரை மீட்டு கோனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி ஜெரின் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தம்பியை கொன்ற ஜெஸ்டினை கைது செய்தனர்.