கிழக்கு லடாக் எல்லை பகுதியில் சீன ராணுவம் அத்துமீறல்களில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது.இதனால் சீனா, இந்திய ராணுவங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பல வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் கடந்த மே மாதம் முதல் இந்த பகுதியில் பதட்டம் நீடித்து வந்தது. இதையடுத்து, இரு தரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதன் பயனாக பங்கோங்சோ ஏரியின் வடக்கு, தெற்கு கரைகளில் இருந்து இரு தரப்பு படைகளும் சமீபத்தில் விலகிக் கொண்டன. இதனால் அங்கு பதட்டம் தணியத் தொடங்கியது.என்றாலும், இரு நாடுகளின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியின் பல்வேறு இடங்களில் இன்னும் இந்திய, சீன படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளில் ராணுவத்தினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், கிழக்கு லடாக் பகுதியில் பதட்டம் முற்றிலும் தணிந்துவிட்டது. அங்கு படைகளை விலக்குவதற்கு இரு நாடுகளும் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி அடைந்துள்ளன என்று சீன ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரும், மூத்த ராணுவ அதிகாரியுமான ரென்குவாகியாங் தெரிவித்துள்ளார்.என்றாலும், எல்லைக் கோட்டு பகுதியில் இன்னும் ராணுவ படையினர் உள்ளனர். இந்த படையை விலக்கிக் கொள்வது குறித்து எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.