கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியில் பெரும்பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இதற்கு வாடிகனும் விதிவிலக்கல்ல.வாடிகனில் கொரோனாவால் அருங்காட்சியகங்கள், புனித தலங்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் இந்த ஆண்டு 50 மில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.500 கோடி) வருமான இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த வருமான இழப்பு காரணமாக கார்டினல்களுக்கும், பிற மத குருக்களுக்கும் சம்பள வெட்டு உத்தரவை போப் ஆண்டவர் பிரான்சிஸ் பிறப்பித்துள்ளார். இது ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. கார்டினல்களை பொறுத்தமட்டில் இந்த சம்பள வெட்டு 10 சதவீத அளவில் இருக்கும். அவர்கள் தற்போது மாதம் 5,000 பவுண்ட் வரையில் (சுமார் ரூ.5 லட்சம்) மாதச்சம்பளம் பெறுகின்றனர் என தகவல்கள் கூறுகின்றன. மத குருக்களுக்கு 3 சதவீதம் முதல் 8 சதவீதம் வரையில் சம்பள குறைப்பு செய்யப்படுகிறது.அதே நேரத்தில் நிதி நெருக்கடி காரணமாக வேலை இழப்புகள் செய்யப்பட மாட்டாது என போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஏற்கனவே அறிவித்து உள்ளார்.