யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள கொரோனா தொற்று காரணமாக அபாய இடர் கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி ஜே 114 பாற்பண்ணை கிராமத்தில் வாழும் மக்கள் தமக்கு உதவிப் பொருட்கள் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்தில் 1136 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் 804 குடும்பங்கள் நிரந்தர வருமானமின்றி நாளாந்தம் தொழிலுக்குச் சென்று தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் எனவே தற்போது குறித்த பகுதியானது கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் வெளியேற முடியாது தடுக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் வசித்து வரும் 800 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தோடு குறித்த பகுதியை சேர்ந்தோர் கூடுதலாக திருநெல்வேலி சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தற்பொழுது சந்தை மூடப்பட்டுள்ளதன் காரணமாக தமது அன்றாட வாழ்வாதார செயற்பாடு முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
எனவே தமக்கு தொண்டு அமைப்புகள் யாராவது உதவ முன்வந்தால் நல்லூர் பிரதேச செயலருடன் தொடர்பு கொள்வதன் மூலம் குறித்த பகுதி மக்களுக்கான உதவிப் பொருட்களை வழங்கி வைக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.நேற்று காலையில் இருந்து குறித்த பாற்பண்ணை பகுதி கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி நுழைவாயில்களில் ராணுவம் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் 51 தொற்றாளர்கள். இனங்காணப்பட்டதையடுத்து அப்பகுதி கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது.