சிங்களம் மட்டும், பெளத்தம் மட்டும் என்பதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

சிங்களம் மட்டும், பெளத்தம் மட்டும் என்பதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

இரண்டாம், மூன்றாம் பிரஜைகளாக நிலைநிறுத்தும் நிலைமையை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க போவதில்லை என்று கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்தில் வாழும், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்களின், “ஜனநாயகத்துக்கான ஆனந்தியர்கள்” என்ற அமைப்பு நேற்றிரவு நடத்திய இணையரங்கத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ஆனந்த கல்லூரி இலங்கையின் புகழ் பெற்ற சிங்கள பெளத்த கல்வி நிறுவனம். இலங்கையின் பிரபல சிங்கள அரசியல் நண்பர்களை உருவாக்கிய கல்லூரி இதுவாகும். ஆகவே இதன் பழைய மாணவர்களாகிய நீங்கள், “இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம்” என்ற நிகழ்வை நடத்துவது சாலப்பொருத்தமானது.

இலங்கையில் சிங்கள மொழி பேசுகின்றவர்கள், பெளத்த மதத்தை பேணுகின்றவர்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மை. அதில் எமக்கு பிரச்சினை இல்லை. அதுபற்றி உண்மையில் நான் மகிழ்கிறேன். ஆனால், இந்த சிங்கள, பெளத்தம் மட்டும் இலங்கை அல்ல. எழுபத்தி ஐந்து என்பது நூறு அல்ல. தொண்ணூற்று ஒன்பது கூட நூறு அல்ல. எழுபத்தி ஐந்துடன் இன்னொரு இருபத்து ஐந்து சேர வேண்டும். அதுதான் நூறு. அதுதான் இலங்கை.ஆகவே இலங்கை நாட்டின் தேசியத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால், நம் நாட்டின் பன்மை தன்மையை முதலில் நீங்கள் ஏற்க வேண்டும். இதுதான் ஐக்கிய இலங்கைக்கான முதல் நிபந்தனை.

தமிழர்களுக்கு அதிகாரம் பிரித்து கொடுத்தால், அவர்கள் தனியொரு நாட்டை அமைத்துக்கொண்டு போய் விடுவார்கள் என்ற பயம் சிங்கள மக்களுக்கு இருக்கிறது. தமிழர் மத்தியில் ஆயுத போராட்டம் மீண்டும் தலையெடுக்கும் என்ற பயமும் இருக்கிறது. மிக நியாயமான பயங்கள் இவை. சிங்களவர் ஏன் இப்படி நினைக்கிறார்களே என சில தமிழ் அரசியல்வாதிகள் கூறுவதுண்டு. நான் அவர்களிடம், இல்லை, அவர்களின் இந்த பயம் நியாயமானது. அதை நாம் நிவர்த்திப்போம் என்று கூறுகிறேன்.

அதேபோல் தமிழர் மத்தியிலும் பயங்கள் உண்டு. இந்த நாட்டை சிங்கள மட்டும், பெளத்தம் மட்டும் என படிப்படியாக மாற்றியமைக்க சிங்கள அரசியல்வாதிகள் முயல்கிறார்கள், என்று தமிழர்கள் நினைக்கிறார்கள். தமிழரை, முஸ்லிம்களை இரண்டாம், மூன்றாம் பிரஜைகளாக நடத்த சிங்கள அரசியல் தலைமை முயல்கிறது என்ற அச்சம் தமிழர் மத்தியில் உள்ளது. இதுவும் மிக, மிக நியாயமான பயம். இதை சிங்கள மக்கள் நிவர்த்தி செய்ய வேண்டும்.

அப்புறம் இந்த அதிகார பகிர்வு என்ற விடயத்தை பாருங்கள். அதிகார பகிர்வு என்றால், சிங்கள மக்களின் அதிகாரத்தை பிடுங்கி எடுத்து, தமிழ் அரசியல்வாதிகளிடம் கையளிப்பது என சிங்கள மக்கள் நினைக்க வைக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும் கையளிப்பது என சிங்கள மக்கள் நினைக்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

இது அப்பட்டமான பிழை. அதிகார பகிர்வு என்றால் சிங்கள அதிகாரத்தை தமிழ், முஸ்லிம்களிடம் கையளிப்பது என்பதல்ல. அது ஒரு ஜனநாயக சித்தாந்தம். கொழும்பில் குவிந்துள்ள அதிகாரங்களை மாகாணங்களுக்கு, மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்ப வேண்டும் என்றால், அவை வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்ல, மஹியங்கனை, மொனராகலை, காலி, மாத்தறை, எம்பிலிபிடிய ஆகிய சிங்கள பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? கொழும்பு தலைநகரில் ஒரு கும்பல் இருக்கிறது. அது ஒரு வகுப்பு. கொழும்பில் எந்த அரசாங்கம் நிலைபெற்றாலும், அந்த கும்பல் அந்த அரசாங்கத்தை பிடித்து கொள்கிறது. வாக்களித்து அரசாங்கங்களை உருவாக்கும் மக்களை விட இந்த கும்பல் அரசாங்கங்களுக்கு உள்ளே செல்வாக்கு மிக்கது.

இது எல்லா அரசாங்கங்களையும் பிடிக்கும். இப்போதைய அரசாங்கத்தையும் இது பிடித்து வைத்துள்ளது. சேனநாயக்க, பண்டாரநாயக்க, விக்கிரமசிங்க, ராஜபக்ச அரசுகள் மட்டுமல்ல, நாளை சஜித் ஆட்சி வந்தாலும், அந்த அரசாங்கத்தை இது பிடிக்கும். அந்தளவு செல்வாக்கு இந்த கும்பலுக்கு உள்ளது. இதற்கு இன, மத அடையாளங்கள் இல்லை. ஆகவேதான், அதிகாரங்களை பிரித்து எல்லா மாகாணங்களுக்கும் அனுப்ப வேண்டும் என நான் கூறுகிறேன். ஆகவே அதிகார பகிர்வை இந்த அடிப்படையில் பாருங்கள்.

மேலும் இது என்ன, மன்னராட்சியா? இங்கு அரண்மனை உள்ளதா? கொழும்பில் ராஜா, ராணி, யுவராஜா, யுவராணி இருக்கிறார்களா? ராஜகுடும்பம் உள்ளதா? ஆகவே கொழும்பில் குவிந்துள்ள அதிகாரங்களை பிரித்து எல்லா தமிழ், சிங்கள, முஸ்லிம் பிராந்தியங்களுக்கு அனுப்ப வேண்டும். இவற்றையெல்லாம் புரிந்துக்கொள்ளுங்கள். இலங்கை தேசத்தை கட்டியெழுப்பலாம். நான் இரண்டு கைகளையும் உயர்த்தி யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தருகிறேன் என்றார்

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *