பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் ஒன்று உள்ளது.கடந்த ஒரு மாதமாக இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் கோவிலில் உள்ள சாமி சிலைகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதோடு, தினசரி பூஜைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை மாலை 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று100 ஆண்டுகள் பழமையான இந்த இந்துக் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து கோவிலை சூறையாடியது. கோவிலின் மேல் தளத்தில் உள்ள கடைகளை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல், மாடிப் படிகளை இடித்து தள்ளினர்.இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இந்த கோவிலை நிர்வகித்து வரும் அறக்கட்டளையின் சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.கோவில் மற்றும் அதன் புனிதத்தன்மையை சேதப்படுத்தியவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரின் பேரில் இந்த நாச வேலையில் ஈடுபட்டது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.முன்னதாக இந்த கோவிலை சுற்றி ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்ததாகவும் மாவட்ட நிர்வாகம் அதனை அகற்றி விட்டு புனரமைப்பு பணிகளை தொடங்கியதாகவும் தெரிகிறது.எனவே ஆக்கிரமிப்பு கும்பலைச் சேர்ந்தவர்கள் கோவிலை சேதப்படுத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.