ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம்

ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம்

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங் தற்போது சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.‌சமீபத்திய ஆண்டுகளில் சீன அரசுக்கு எதிரான இந்த போராட்டங்கள் மிகவும் வலுப்பெற்றதால், ஹாங்காங் மீதான தனது பிடியை இறுக்கும் விதமாக சீனா அங்கு சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை கடந்த ஆண்டு அமல்படுத்தியது.இந்த சட்டத்தை தீவிரமாக எதிர்த்து, போர்க்கொடி உயர்த்தி வந்த ஜனநாயக ஆதரவு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீன நிர்வாகத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து சீனாவின் இந்த அடாவடியை எதிர்த்து ஹாங்காங் சட்டமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 15 பேரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.இந்த விவகாரம் சர்வதேச அளவில் எதிரொலித்தது. எனவே இது ஹாங்காங் நிர்வாகத்துக்கும் மத்திய அரசான சீனாவுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஹாங்காங் சட்டமன்றத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்கும் விதமாக சட்டமன்ற தேர்தல் முறையில் பெரிய அளவில் மாற்றம் கொண்டுவர சீனா முடிவு செய்தது.

ஹாங்காங்கில் சட்டமன்றம் மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்டது. அதில் 35 பேர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர். 30 பேர் ஹாங்காங்கை சேர்ந்த வணிகர்கள், வங்கி அமைப்பு போன்றவர்களை கொண்ட குழுக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் சீனாவின் ஆதரவாளர்களாகவே இருப்பார்கள். எஞ்சிய 5 பேர் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கவுன்சிலர்களாக இருப்பர்.

இந்த முறையை முற்றிலும் மாற்றி சட்டமன்றத்தில் சீன ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கையை பெருமளவு உயர்த்த தேர்தல் முறை மாற்றியமைக்கும் பணிகளில் சீனா இறங்கியது.அதன்படி கடந்த மாத தொடக்கத்தில் சீன அதிபர் ஜின்பிங் தலைமையில் நடைபெற்ற தேசிய நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருவதற்கான வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது.இது ஹாங்காங்கின் ஜனநாயகத்தை முற்றிலுமாக சிதைக்கும் நடவடிக்கை என அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்தநிலையில் ஹாங்காங் தேர்தல் முறையை மாற்றியமைக்க ஹாங்காங் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக சீன நாடாளுமன்ற நிலைக்குழு ஓட்டெடுப்பை நடத்தியது. இதில் நாடாளுமன்ற நிலைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் ஹாங்காங் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவருவதற்கு ஒப்புதல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து உடனடியாக அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு தேர்தல் முறை மாற்றி அமைக்கப்பட்டது.

ஹாங்காங் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 70-ல் இருந்து 90 ஆக உயர்த்தப்படுகிறது; மக்களால் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாக, அதாவது 35-ல் இருந்து 20 ஆக குறைக்கப்படுகிறது; தேர்தலுக்கு முன் வேட்பாளர்களை சரிபார்க்கும் பணியை மேற்கொள்ள குழு ஒன்று அமைக்கப்படும், என்பன போன்ற பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு ஹாங்காங்கின் ஜனநாயக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது அங்கு போராட்டத்துக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *