காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் கஹாபுராவில் நேற்று பாதுகாப்பு படையினர் ரோந்து வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.உடனே பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதல் நடத்தினார்கள். மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் அந்த இடத்துக்கு கூடுதலாக வரவழைக்கப்பட்டனர்.அவர்களை கண்டதும் அருகில் இருந்த வீட்டுக்குள் பயங்கரவாதிகள் புகுந்தனர். அங்கிருந்தபடி தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே நேற்று இரவில் இருந்து தொடர்ந்து சண்டை நடந்து வந்தது.
இன்று காலையிலும் சண்டை நீடித்தது. வீட்டுக்குள் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருந்தனர். அவர்களை சுட்டு வீழ்த்த பாதுகாப்பு படையினர் முழுமையாக சுற்றி வளைத்து தாக்கினார்கள். காலை 10 மணியளவில் 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.நேற்று நவ்கான் என்ற இடத்தில் பாரதீய ஜனதா தலைவருக்கு பாதுகாப்பில் இருந்த போலீஸ்காரர் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
இதில் ஈடுபட்டவர்கள்தான் இவர்கள் என்று கருதப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை போலீசாருடன் நடந்த சண்டையில் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இப்போது மேலும் 3 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.பெரும்பாலும் ஷோபியான், புல்வாமா மாவட்டங்களில்தான் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே அந்த மாவட்டங்களில் கூடுதல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்