கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் கடந்த 27-ந்தேதி தனது டுவிட்டரில் எனக்கு சிறிய அறிகுறியுடன் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதியானது.இதனால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். டாக்டர்கள் கூறிய அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன் என்று தெரிவித்தார். மேலும் தனது குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து தெண்டுல்கர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 6 நாட்களுக்கு பிறகு தெண்டுல்கர் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
உங்களின் வாழ்த்துக்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. மருத்துவ ஆலோசனையின்படி முன்எச்சரிக்கையாக நான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். சில நாட்களில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். அனைவரும் தங்களது நலனில் கவனம் செலுத்தி பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.மேலும் 2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற 10-வது ஆண்டு தினத்தையொட்டி இந்தியர்களுக்கும் மற்றும் எனது அணியினருக்கும் வாழ்த்துக்கள் என்றும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ராய்ப்பூரில் நடந்த சாலை பாதுகாப்பு உலக சீரிஸ் போட்டியில் தெண்டுல்கர் பங்கேற்று விளையாடினார். அதன்பின் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதே போல் அவருடன் இந்திய லெஜன்ட்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த யூசுப் பதான், இர்பான்பதான், பத்ரிநாத் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.