மியான்மர் நாட்டில் ஜனநாயக ஆட்சியை கடந்த பிப்ரவரி 1-ந்தேதி ராணுவம் கவிழ்த்து விட்டு அதிகாரத்தை கைப்பற்றியது.அந்நாட்டின் தலைவர் ஆங்சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை ஒடுக்க ராணுவம் துப்பாக்கி சூடு உள்ளிட்ட அடக்கு முறைகளை கையாண்டு வருகிறது.500-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் மியான்மர் ராணுவத்துக்கு ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் மியான்மரில் ராணுவத்தால் நடக்கும் வன்முறைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது:-மியான்மர் நாட்டில் நடத்தப்படும் எந்தவொரு வன்முறைக்கும் இந்தியா கண்டனம் தெரிவித்து கொள்கிறது. அங்கு சட்டத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்பட்டு ஜனநாயகம் மீண்டும் தழைக்க வேண்டும். அங்கு கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களை விடுவிக்க வேண்டும்.
மியான்மரில் தற்போது நிலவும் சூழலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளை கொண்ட ஆசி யான் அமைப்பின் நடவடிக்கைகள் உள்பட அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. இதில் சர்வதேச நாடுகளுடனும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுடனும் இந்தியா தொடர்பில் இருந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.