கொரோனா அச்சம் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என வடகொரியா அறிவித்துள்ளது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.அதன்படி, வருகிற ஜூலை 23-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.
டோக்கியோ உள்பட ஜப்பானின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.இந்த நிலையில் ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவதில்லை என வடகொரியா அறிவித்துள்ளது.தங்கள் நாட்டின் விளையாட்டு வீரர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் தங்கள் நாட்டில் ஒருவருக்குக்கூட கொரோனா தொற்று இல்லை என வடகொரியா இப்போது வரை கூறிவருகிறது.பகைமை விலகி இணக்கமான உறவு ஏற்பட்டது ஆனால் சர்வதேச நிபுணர்கள் இது குறித்து தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.அதே சமயம் கடந்த ஆண்டு உலக நாடுகளுக்கு கொரோனா பரவ தொடங்கியது முதலே வடகொரியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாகவே தற்போது ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணித்து இருப்பதாக வடகொரியா கூறுகிறது. வடகொரியாவின் இந்த அறிவிப்பு தென் கொரியாவுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.ஏனெனில் இந்த ஒலிம்பிக் போட்டிகள் இரு கொரிய நாடுகளுக்கு இடையிலான இணக்கமான சூழலை உருவாக்குவதற்கு ஒரு உந்துசக்தியாக அமையும் என தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றதன் மூலமாகவே இரு நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த பகைமை விலகி இணக்கமான உறவு ஏற்பட்டது.மேலும் இது வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மற்றும் அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புகளுக்கு வழிவகுத்தது.
இந்த சந்திப்புகள் மேம்பட்ட உறவுகளுக்கான நம்பிக்கைகளை ஏற்படுத்தின. ஆனால் எதுவும் முறையாக செயல்படுத்தப்படாததால் நிலைமை மீண்டும் மோசமடைந்தது.வடகொரியாவுடனான தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் உறவுகள் தொடர்ந்து பதற்றமான சூழலிலேயே உள்ளது.இதனை சரி செய்வதற்கு ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளை தென்கொரியா மிகவும் நம்பியிருந்த நிலையில் வடகொரிய அதனை தற்போது புறக்கணித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
1988-ம் ஆண்டுக்கு பிறகு வட கொரியா ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா விரைவில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது