கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட பல தரப்பினராலும் அரசாங்கத்திற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புக்களை சமாளிப்பதற்காகவே ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என்று அரசாங்கம் அடையாளப்படுத்தியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.இதன் மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்பவே அரசாங்கம் முயற்சிக்கிறது. எனினும் நாம் இதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஈஸ்டர்தாக்குதலை 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது பிரதான பிரசாரமாக இந்த அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது. எனினும் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் எந்தவொரு நபரும் கைது செய்யப்படவில்லை.
மாறாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை முழுமையானதாகக் காணப்படவில்லை. எனினும் அதில் கூறப்பட்டிருந்த சில முக்கிய காரணிகளின் அடிப்படையில் அவதானிக்கும் போது சஹ்ரானுக்கு அப்பால் பிரிதொரு சக்தி இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ளது என்ற சந்தேகம் எழுகிறது.
2019ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் கைது செய்யப்பட்ட நௌபர் மௌலவியே இதன் பிரதான சூத்திரதாரி என்று கூறுகின்றனர். ஆனால் தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியாக இருக்கும் போது பிரதான சூத்திரதாரி தொடர்பில் பல பிரசாரங்களை முன்னெடுத்தது.அவ்வாறெனில் தற்போதைய அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்ட பிரதான சூத்திரதாரி யார்? இதனை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.
கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட பல தரப்பினராலும் அரசாங்கத்திற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புக்களை சமாளிப்பதற்காகவே இந்த அறிவித்தல் விடப்பட்டிருக்கிறது.ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் தகவல்களை அறிந்து வைத்திருந்த சாரா என்பவர் உயிருடனிருப்பதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அவ்வாறெனில் ஏன் அது குறித்து அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமலுள்ளது? இவ்வாறான செயற்பாடுகள் மூலம் மக்களை கவனத்தை வேறு திசைக்கு மாற்றவே அரசாங்கம் முயற்சிக்கிறது. எனினும் நாம் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.