அஜித் ரோஹண வெளியிட்டுள்ள கருத்து!

அஜித் ரோஹண வெளியிட்டுள்ள கருத்து!

யாழ் நகரில் சுகாதார நடைமுறைகள் மற்றும் போக்குவரத்து பணிகள் தொடர்பில் ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்வதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்னர் 5 பேர் கொண்ட குழுவொன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.அந்தக் குழுவினர் சீருடை அணிந்தவாறு சேவையில் ஈடுபட்டிருந்தமை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் போது யாழ் மாநகர சபையின் தலையீட்டில் போக்குவரத்துப் பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தெரியவந்தது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,இவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள சீருடையானது தமிழீழ விடுதலைப்புலிகளினால் நடத்திச்செல்லப்பட்ட காவற்படையினரது சீருடைக்கு ஒப்பானது என்பது எமது விசாரணையில் தெரியவந்தது. அதற்கமைய யாழ். பொலிஸார் மேலதிக தகவல்களை சேகரித்தனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவின் ஆலோசனைப்படி விசேட விசாரணை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டதுடன் அதற்கமைய யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் பலரிடம் வாக்குமூலம் பதிவுசெய்து கொள்ளப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.வாக்குமூலப் பதிவில், யாழ். மாநகர மேயரினால் இவர்கள் தற்காலிக சேவையாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டு சீருடை வழங்கப்பட்டுள்ளமையும் தெரியவந்தது. இந்த செயற்பாடானது தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னத்தை பகிரங்கப்படுத்துவதற்கு சமமாகும் எனவும் 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பிற்கமைய, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இது குற்றமாகும் எனவும் தெரிவித்தார்.

அதற்கமைய இன்றைய தினம் அதிகாலை யாழ். மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் சந்தேக நபர் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டார்.பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அடுத்த கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பயங்கரவாத விசாரணைப் பிரிவுடன் இணைந்து யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

அதன் பின் தமிழ், சிங்களம், முஸ்லிம் என அனைவரும் ஐக்கியமாக வாழக்கூடிய நிலைமை ஏற்பட்ட போதிலும் இதுபோன்ற செயற்பாடுகள் மீண்டும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தக்கூடியதாக அமைகிறது. தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் அடையாளத்தை வெளிப்படுத்துவது, அதற்காக செயற்படுவது சட்டத்திற்கு முன்பாக தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த நிலையில் விசாரணைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன எனவும் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *