கொழும்பு, முல்லேரியா பிரதேசத்தில் வீடு ஒன்றிற்குள் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.கண்டுபிடிக்கப்பட்ட பதுங்கு குழிக்குள் சந்தேக நபர் ஒருவர் மறைந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,முல்லேரியா பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சரத் குமார என்றழைக்கப்படும் ´ஜீடி´ என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் உயிரிழந்த அங்கொட லொக்காவை முதல் முதலாக குற்ற செயலில் ஈடுபடுத்தியவர் இவரே எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.குறித்த சந்தேக நபர் அவரது வீட்டில் இருந்த பதுங்கு குழியிலேயே பதுங்கி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதி வெலிகம பிரதேசத்தில் விசேட பொலிஸ் பிரிவினரால் 112 கிலோ கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒன்பதாவது சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஜீடி என்பவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.