ரஷியாவின் 2-வது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வரலாற்று சிறப்பு மிக்க ஆடை தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை நீண்ட வரலாற்றை கொண்டது.இந்த நிலையில் தொழிற்சாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ வேகமாக கட்டிடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இதனால் பயங்கர தீ கரும்புகையுடன் கொளுந்து விட்டு எரிந்தது.உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. சுமார் 350 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தொழிற்சாலையில் சிக்கி இருந்த 40 பேரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மீட்பு பணியில் ஈடுபட்ட போது ஒரு தீயணைப்பு வீரர் பரிதாபமாக இறந்தார். 2 பேருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து தீயை அணைக்க வீரர்கள் போராடினர்.பழமை வாய்ந்த இக் கட்டிடத்தில் 1841-ம் ஆண்டு முதல் ஆடைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த கட்டிடம் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் ஒரு முக்கிய அடையாளமாக திகழ்கிறது.
நெவா ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை, சோவியத் யூனியன் காலத்தில் அரசாங்கத்தால் நடத்தப்பட்டது. பின்னர் 1992-ம் ஆண்டு தனியார் மயமாக்கப்பட்டது.சமீபத்திய ஆண்டுகளில் கட்டிடத்தின் சில பகுதிகள் துணிகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மற்ற பகுதிகள் அலுவலகங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டன. மேலும் சில பகுதிகள் கைவிடப்பட்டு காலியாக இருந்தன.2001-ம் ஆண்டு இந்த தொழிற்சாலை செயின்ட் பீட்டஸ்பர்க்கின் வரலாறு மற்றும் கலாசார ரீதியாக மதிப்புமிக்க தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.தீ விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.