போராட்டம் நடத்திய மருத்துவ தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

போராட்டம் நடத்திய மருத்துவ தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

மியான்மர் நாட்டில் நடந்த பொதுத்தேர்தலுக்கு பின்னர் அந்த நாட்டின் நாடாளுமன்றம் கடந்த பிப்ரவரி 1-ந்தேதி கூட இருந்தது. ஆனால் அந்த நாளில் ராணுவம் சற்றும் எதிர்பாராத வகையில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.அந்த நாட்டில், நோபல் அமைதி பரிசு பெற்ற ஆங் சான் சூ கி தலைமையிலான தேர்ந்தெடுக்கப்ட்ட அரசாங்கத்தை ராணுவம் வெளியேற்றியது. அத்துடன் சூ கி உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்களை கைது செய்து வீட்டுச்சிறையில் வைத்தது.

மியான்மரில் ஜனநாயக ரீதியிலான அரசை ஏற்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மியான்மர் ராணுவ ஆட்சியாளர்கள் மீது அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்தன. சூ கியை விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியது. ஆனாலும் ராணுவம் இதற்கெல்லாம் இன்றளவும் செவி சாய்க்கவில்லை.

இதனால் அங்கு தொடர்ந்து மூன்றாவது மாதமாக ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஜனநாயக ஆட்சிக்கு ஆதரவாகவும் பல தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் போராட்டக்காரர்களை ராணுவம் ஒடுக்கி வருகிறது. இதற்கு எதிராக சர்வதேச அளவில் பலத்த எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன.மியான்மரில் திங்கியன் என்று அழைக்கப்படுகிற 5 நாள் புத்தாண்டு விடுமுறை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஆனால் ஜனநாயக ஆதரவு இயக்கத்தினர், தங்கள் வழக்கமான கொண்டாட்டங்களை ரத்து செய்து விட்டு, ராணுவ ஆட்சி மீதான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் போராட்டங்களில் கவனம் செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில், அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேவில் நேற்று அறவழிப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து, மருத்துவ தொழிலாளர்கள் பெரிய அளவில் கூடி இருந்தார்கள்.ஆனால் அவர்களை விரட்டியடிப்பதற்காக அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.

போராட்டக்காரர்களில் பலரை சுற்றி வளைத்து கைது செய்த ராணுவம், துப்பாக்கிச்சூடு நடத்தியது.இதனால் போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அந்தப்பகுதியில் உள்ள ஒரு மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பலர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

மசூதி அருகேயுள்ள பகுதியில் வசிக்கிற ஒருவர் இதுபற்றி கூறும்போது, “மசூதி வளாகம் அருகே ராணுவத்தினர் வந்த உடனேயே துப்பாக்கிச்சூட்டை தொடங்கி விட்டனர். அதில் ஒருவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டார். இங்கே போராட்டம் நடக்கவில்லை. ஆனாலும் அங்கே யாரேனும் இருக்கிறார்களா என தேடி வந்த ராணுவம் சுடத்தொடங்கி விட்டது” என கூறினார்.இதற்கிடையே மியான்மர் அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம், இதுவரை அங்கு நடந்த போராட்டங்களில் 715 எதிர்ப்பாளர்களை ராணுவம் கொன்று குவித்துள்ளதாக கூறுகிறது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *