அமெரிக்கா மீது தாக்குதல் நடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் தலீபான்கள் தஞ்சம் அளித்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடுத்தது. அங்கு தலீபான்களின் ஆட்சியை அகற்றியது. மக்களாட்சியை மலரச்செய்தது.
எனினும் தொடர்ந்து அங்கு அமெரிக்கப்படைகள் இருந்து, தலீபான்களை ஒடுக்க உள்நாட்டு படைகளுக்கு பக்கபலமாக இருந்து வருகின்றன. ஏறத்தாழ 20 ஆண்டு காலத்துக்கு பின்னர் இப்போது ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை அமெரிக்கா முழுமையாக திரும்பப்பெற முடிவு செய்து அறிவித்துள்ளது. இதுகுறித்து அங்குள்ள பால்க் மாவட்டத்தின் தலீபான் தளபதியும், நிழல் மேயருமான ஹாஜி ஹெக்மாட் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், “நாங்கள்தான் போரில் வெற்றி பெற்றிருக்கிறோம். அமெரிக்கா தோற்றுப்போய் விட்டது. நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம். நாங்கள் சமாதானத்துக்கு தயார். அதே நேரத்தில் புனிதப்போருக்கும் தயாராகவே உள்ளோம்” என குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறும்போது, “நாங்கள் ஷரியத் சட்டத்தின் அடிப்படையிலான இஸ்லாமிய அரசு வர வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களது கோரிக்கை ஏற்கப்படுகிறவரையில் போர் தொடரும். ஆப்கானிஸ்தான் அரசியல் கட்சிகளுடன் அதிகாரப்பகிர்வுக்கு சாத்தியம் உண்டா என்று கேட்கிறீர்கள். இதை கத்தாரில் உள்ள எங்களது அரசியல் தலைமை தீர்மானிக்கும். அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் நாங்கள் ஏற்போம்” எனவும் கூறினார்.