உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைப்பதால் பெரும்பாலான ஆலோசனைக் கூட்டங்கள், கலந்துரையாடல்கள், உச்சிமாநாடுகள் காணொளி வாயிலாகவே நடத்தப்படுகின்றன. இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்போர், உஷாராக இருக்க வேண்டும். மீட்டிங் தொடங்குவதற்கு முன்பாகவோ, மீட்டிங் முடிந்த பிறகோ கேமராவின் மீது நாம் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். கேமரா ஆனில் இருந்தால், நமது செயல்பாடுகளை மற்றவர்கள் பார்வைக்கு சென்றுவிடும் என்பதை மறக்கக்கூடாது. இது சில நேரங்களில் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும். அப்படித்தான், கனடா நாட்டின் எம்பி வில்லியம் ஆமோஸ் தனது கவனக்குறைவால் வசமாக மாட்டிக்கொண்டார்.
காணொளி வாயிலாக நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் எம்பி வில்லியம் ஆமோஸ் கலந்துகொண்டார். அப்போது, அவர் கையில் செல்போனுடன், கியூபெக்-கனடா தேசியக்கொடிகளுக்கு மத்தியில் நிர்வாண நிலையில் தோன்றினார். காணொளியில் இணைந்திருந்த மற்ற உறுப்பினர்கள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த செயலால் வெட்கித் தலைகுனிந்த எம்.பி. வில்லியம் ஆமோஸ், நடந்த தவறுக்காக சக உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டார். ‘நான் இன்று மிகவும் மோசமான தவறைச் செய்துவிட்டேன். இதற்காக நான் வெட்கப்படுகிறேன். ஜாகிங் சென்று திரும்பியதும் உடை மாற்றியபோது, கேமரா தற்செயலாக ஆன் ஆனதை கவனிக்கவில்லை. இதற்காக சபையில் உள்ள சக உறுப்பினர்கள்
அனைவரிடமும் மன்னிப்புகேட்டுக்கொள்கிறேன்.இதுபோன்ற தவறு மீண்டும் நடக்காது’ என்று வில்லியம் கூறி உள்ளார்.உறுப்பினர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், வீட்டில் இருந்தாலும் எல்லா நேரங்களிலும் ஆடை அணிந்திருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி கொறடா அறிவுறுத்தி உள்ளார். கேமராவை நன்கு கட்டுப்படுத்துவது தொடர்பாக உறுப்பினர்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்