அமெரிக்கா அதிரடி-ஷியா மீது புதிய பொருளாதார தடைகள் விதிப்பு.

அமெரிக்கா அதிரடி-ஷியா மீது புதிய பொருளாதார தடைகள் விதிப்பு.

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ர‌ஷியா தலையிட்டு குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்புக்கு ஆதரவாகவும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராகவும் செயல்பட்டதாக கடும் குற்றச்சாட்டு எழுந்தது.இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையில், விசாரணை நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க தேர்தலில் ர‌ஷியா தலையீடு இருந்தது உண்மை என்றாலும், ரஷிய அதிகாரிகளுக்கும் டிரம்ப் பிரசார குழுவுக்கும் ரகசிய தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என ராபர்ட் முல்லர் தலைமையிலான விசாரணைக்குழு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலும் ரஷியாவின் தலையீடு இருந்ததாக அமெரிக்க உளவுத்துறை கடந்த மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அப்போதைய ஜனாதிபதி டிரம்புக்கு சாதகமான வகையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீது தவறான, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை, டிரம்ப் ஆதரவாளர்கள் மூலம் பரப்ப ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.அதேபோல் கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவின் அரசுத்துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு ரஷியாவே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இந்த 2 குற்றச்சாட்டுகளையும் ரஷியா திட்டவட்டமாக மறுக்கிறது.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டது மற்றும் அரசுத் துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தியது ஆகிய விவகாரங்களில் ரஷியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் இந்த விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள ரஷிய தூதர்கள் 10 பேர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர். இதற்கான நிர்வாக உத்தரவை ஜனாதிபதி ஜோ பைடன் பிறப்பித்தார். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-


2020-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு மற்றும் அரசுத்துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், ரஷிய அரசுக்கு எதிரான பொருளாதார தடைகள் விரிவுபடுத்தும் உத்தரவை ஜனாதிபதி ஜோ பைடன் பிறப்பித்துள்ளாா். அதன்படி 32 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.மேலும், தோ்தல் தலையீட்டில் அங்கம் வகித்த உளவாளிகள் உள்ளிட்ட 10 ரஷிய தூதரக அதிகாரிகள் அமெரிக்காவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
சா்வதேச அளவில் ஸ்திரத்தன்மையை குலைய செய்யும் ரஷியாவின் நடவடிக்கைகள் தொடா்ந்தால் அதற்கு அமெரிக்கா தகுந்த பதிலடி கொடுக்கும் என்பதை ஜனாதிபதி பைடனின் இந்த உத்தரவு உணர்த்துகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதனிடையே தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷியா எச்சரித்துள்ளது‌.

அதேசமயம் ரஷியாவுடன் மோதும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ரஷியா மீது இன்னும் அதிகமான நடவடிக்கைகள் எடுக்க முடியும். ஆனால் நான் அதை விரும்பவில்லை. அமெரிக்கா ரஷியாவுடன் மோத விரும்பவில்லை. பேச்சுவார்த்தை மூலமாகவும் தூதரக ரீதியிலும் இருதரப்பு உறவை வலுப்படுத்த விரும்புகிறேன். ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேச அவரிடம் விருப்பம் தெரிவித்துள்ளேன். இந்த சந்திப்பு இரு தரப்புக்கும் பரஸ்பர நலன் அளிக்கக்கூடியதாக இருக்கும்’’ என கூறினார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *