சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து, சின்னக் கலைவாணர் என்று எல்லோராலும் ஏற்றிப் போற்றப்பட்ட நடிகர் விவேக் அவர்கள், திடீர் மாரடைப்பால் இன்று காலையில் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தி, மிகுந்த வேதனை அளிக்கின்றது என ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை மற்றும் அப்துல் கலாம் அவர்களின் கருத்துக்களை நெஞ்சில் தேக்கி, அதைத் திரைப்படங்களில் நகைச்சுவையாக வெளிப்படுத்தினார். நடிப்பை ஒரு தொழிலாக மட்டும் பார்க்காமல், சமூக மேம்பாட்டுக் கருவியாகவே பயன்படுத்தினார்.
தான் ஈட்டிய பொருளிள் பெரும்பகுதியை, சமூகத் தொண்டு அறப்பணிகளுக்காகச் செலவிட்டார். இளம்பிள்ளைகளுக்கு மனித நேயக் கருத்துகளை எடுத்து உரைத்தார். தமிழ்நாடு முழுமையும் இலட்சக்கணக்கான மரங்களை நாட்டி வளர்த்தார்.
அது மாத்திரமல்ல இந்தியாவில் அகதி முகாமில் வாழும் ஈழ தமிழ் சிறார்களின் கல்விக்காக பல அர்ப்பணிப்புக்களை செய்துள்ளார்.
சிரித்துக் கொண்டே அவர் விதைத்த மரங்களும்,சிரிக்க வைத்து அவர் விதைத்த சிந்தனைகளும்,காலம் தாண்டி வாழும்!
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும்,
ஈழத் தமிழர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்