எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மன்சவுரா நகருக்கு நேற்று முன்தினம் காலை பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது.நைல் டெல்டா பிராந்தியத்தின் கலியுபியா நகரிலுள்ள ஒரு ரெயில் நிலையத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த போது சற்றும் எதிர்பாராத வகையில் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரெயிலின் 4 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி கவிழ்ந்தன.
இதையடுத்து ரெயிலின் மற்ற பெட்டிகளில் இருந்த பயணிகளும், உள்ளூர் மக்களும் உடனடியாக விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தடம் புரண்ட ரெயில் பெட்டிகளில் சிக்கியிருந்த பயணிகளை அவர்கள் மீட்டனர்.எனினும் இந்த கோர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 98 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ரெயில் விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இது குறித்து விரிவான விசாரணை நடத்த அந்த நாட்டின் அதிபர் அப்துல் பத்தா அல் சிசி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக ரெயில் டிரைவர், அவரது உதவியாளர் மற்றும் ரெயில் நிலைய அதிகாரிகள் 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.எகிப்தில் ஒரு மாதத்துக்குள் நடந்த 2-வது மிகப்பெரிய ரெயில் விபத்து இதுவாகும். கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி எகிப்தின் தெற்கு பகுதியில் உள்ள சோஹாக் மாகாணத்தில் 2 பயணிகள் ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 19 பேர் உயிரிழந்ததும், 185 பேர் படுகாயமடைந்ததும் நினைவுகூரத்தக்கது.