இலங்கையினை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவுபெறுகின்றது. இந்த தாக்குதலில் உயிர் நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21அன்று பயங்கரவாதிகளினால் இலக்குவைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இன்று காலை விசேட வழிபாடு முன்னெடுக்கப்பட்டது.
குண்டுத் தாக்குதலுக்குள்ளான தேவாலயத்தில் முதன்முறையாக இன்றைய தினம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புக்கும் மத்தியில் இந்த விசேட வழிபாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், தாக்குதலில் காயமடைந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் இன்றைய வழிபாட்டில் கலந்துகொண்டனர்.
சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் தலைமையில் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தியடையவும் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மீட்சிபெறவும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன் இந்த நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கவும் நாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்படவும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. சீயோன் தேவாலயத்தின் மீதான தாக்குதலில் 31பேர் உயிரிழந்ததுடன் 80க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.